பாதுகாப்பு, நம்பகமானது என நினைக்கும் பாட்டில் குடிநீரால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன? மருத்துவர்கள் விளக்கம்

12 hours ago 2

Packaged Drinking waterதாம்பரம் : ஒவ்வொரு மனிதனும் உடல் சோர்வு இல்லாமல் உழைக்க தண்ணீர் இன்றியமையான ஒரு முக்கிய தேவையாக உள்ளது. பூமியில் இருந்து கிடைக்கும் தண்ணீர் தாகத்தை தனிப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய நன்மைகளை கொடுக்கிறது. அதே சமயம் தண்ணீர் பல வகைகளில் நன்மை அளித்தாலும் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் நமக்கு கெடுதலையே உண்டாக்கும் என்பதுதான் பலரும் அறியாத ஒன்றாக உள்ளது.

நம்மில் பலரும் சிறிதும் யோசிக்காமல் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரை வாங்கி பருகி வருகிறோம். இது மனித உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும். பல பிளாஸ்டிக் பாட்டில்கள் கடற்கரைகளில் கிடக்கும் நிலையில், தெருக்களில் வீசப்படும் பாட்டில்கள் கழிவுநீர் வடிகால் அமைப்புகளையும் கூட அடைத்துவிடும். கடந்த பல வருடங்களாக பாட்டில்களில் விற்கப்படும் தண்ணீர் மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது என்று கருதி லட்சக்கணக்கான மக்கள் அதை பருகி வருகிறார்கள்.

உண்மையில் கூற வேண்டுமானால், பலர் தங்கள் அன்றாட வாழ்வின் முக்கியமான ஒன்றாக பாட்டில் தண்ணீரை நம்பி இருக்கிறார்கள், அதற்கு காரணமாக அதன் பேக்கேஜிங் மற்றும் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் அதை தூய்மை மற்றும் பாதுகாப்போடு ஒப்பிடுகிறார்கள். இன்றைய நவீன கால கட்டத்தில் பாட்டில் தண்ணீர் மிகவும் பிரபலமாகி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் பாட்டில் தண்ணீரைத் தான் வாங்குகிறார்கள். எங்கே போனாலும் இது எளிதில் கிடைப்பதால் இதன் பயன்பாடு சாதாரணமாகி விட்டது. ஆனால், இந்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏகப்பட்ட தீமைகள் நமக்கு ஏற்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதுகுறித்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் இதயநோய் நிபுணரான டாக்டர் அருண் கல்யாணசுந்தரம் கூறியதாவது: இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் பல்வேறு பிராண்டுகள் நாம் எதிர்பார்க்கும் கடுமையான பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்ய தவறிவிட்டன என்றும், இதன் காரணமாக இவை நமது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.

சுகாதாரமற்ற இந்த தண்ணீர் பாட்டில்களில் நுண்ணுயிர் மற்றும் ரசாயனம் இருப்பதால் அவை நமது உடல் நலத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது. அதுபோன்ற குடிநீர் பாட்டில்கள் வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தபோதிலும், அதில் பல பாட்டில் தண்ணீர் பிராண்டுகளில் எஸ்கெரிச்சியா கோலை மற்றும் சால்மோனெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளும், ஈயம், ஆர்சனிக் மற்றும் வுளூரைடு போன்ற நச்சுப் பொருட்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வளவு நச்சுத்தன்மை நிறைந்த குடிநீரை தொடர்ந்து குடிக்கும்போது அதன் காரணமாக இரைப்பை குடல் பிரச்னைகள், சிறுநீரக பாதிப்பு, இதய பிரச்னைகள் மற்றும் புற்றுநோய் உள்பட கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இதில் மற்றொரு கவலை மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஆகும். பிளாஸ்டிக் கொள்கலன்களில் இருந்து உருவாகும் இந்த துகள்கள், ஹார்மோன் இடையூறுகள் முதல் நாள்பட்ட அழற்சி வரை உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும். இந்த தண்ணீரில் உள்ள ஈயம் மற்றும் ஆர்சனிக் போன்ற உலோகங்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியுடன், அவை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தண்ணீரை பருகும்போது இதில் உள்ள நச்சுப் பொருட்களால் அவர்களின் உடல்நலம் மேலும் மோசமாவதோடு இதயம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

பாட்டில் தண்ணீரில் உள்ள ரசாயன மாசுக்கள் காரணமாக நாள்பட்ட சிறுநீரக நோய், சிறுநீரக கற்கள் மற்றும் காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பு போன்றவையும் ஏற்படும். அத்துடன் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரில் பிளாஸ்டிக் தொடர்பான மாசுக்கள் அதிகரித்து வருவது மற்றொரு கவலையாக உள்ளது.

இந்நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சமீபத்திய வெளியீடுகள், நுகர்வோர் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இருவருக்கும் ஒரு எச்சரிக்கையாகும். உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் பாதுகாப்பிற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றாலும் ஒழுங்குமுறை அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதும், பாதுகாப்பற்ற பொருட்கள் சந்தையில் இருந்து அகற்றப்படுவதை உறுதி செய்வதும் முக்கியமானது.

பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு எப்போதும் முதன்மையானதாக இருக்க வேண்டும். மேலும் நமது கூட்டு நடவடிக்கையின் மூலம் மட்டுமே அசுத்தமான பாட்டில் தண்ணீரால் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்க முடியும். மேலும் பாட்டில் தண்ணீரில் மறைந்திருக்கும் ஆபத்து என்பது நமக்கு தெரிந்ததை விட அதிக தீங்கு விளைவிக்கும். ஆனால் நாம் சிறந்த ஒன்றை தேர்வு செய்யும்போது அது எந்தவித நோய் பாதிப்பும் இல்லாமல் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் உள் மருத்துவப் பிரிவு ஆலோசகர் டாக்டர் பிரவல்லிகா ரெட்டி கூறியதாவது: இன்றைய உலகில் பாட்டில் அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தண்ணீரை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல்வேறு ஆபத்துகள் மறைந்துள்ளன என்பது பலருக்கு தெரியாது.

இதன் காரணமாக உடல் நலப்பாதிப்பும், சுற்றுச்சூழலில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. நமக்கு தண்ணீர் தாகம் எடுத்தால் நாம் உடனடியாக கடையில் பாட்டிலில் அடைக்கப்பட்ட அல்லது பேக்கேஜிங் செய்யப்பட்ட தண்ணீரை வாங்கிக் குடிக்கிறோம். ஆனால் அதில் என்னென்ன ரசாயனங்கள் மற்றும் நமது உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயங்கள் மறைந்துள்ளது என்பது குறித்து நமக்கு தெரியாது.

அதுகுறித்து நாம் கவலைப்படுவதும் இல்லை. இதில் முக்கியமாக இந்த பாட்டிலை தயாரிக்க பயன்படுத்தப்படும் பாலி எத்திலீன் டெரெப்தாலேட் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனம் ஆகும். இந்த பாட்டிலின் மீது அதிக சூரிய ஒளிபடும்போது, அதன் காரணமாக பித்தலேட்டுகள் மற்றும் ஆண்டிமனி போன்றவை தண்ணீரில் கலக்கும். இது இனப்பெருக்க பிரச்னைகள் மற்றும் நாளமில்லா செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இரண்டாவதாக பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரில் அதிக அளவு மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் இருக்கலாம். அதை நாம் குடிக்கும்போது அதன் காரணமாக வீக்கம் மற்றும் செல்லுலார் சேதம் போன்றவை ஏற்படலாம். மூன்றாவதாக, இதில் வைரஸ் அல்லது பாக்டீரியா மாசுபாடு காரணமாக இரைப்பை குடல் நோய்த்தொற்று ஏற்படும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

நான்காவதாக, பாட்டில் தண்ணீரில் பல்வேறுகட்ட வடிகட்டுதல் நிலை உள்ளது. இதன் காரணமாக தண்ணீரில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குறையலாம். அதேசமயம் நன்கு வடிகட்டப்பட்ட குழாய் தண்ணீரில் சில நேரங்களில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அதிக ஊட்டச்சத்துகள் இருக்கலாம். அவை நம் ஆரோக்கியத்திற்கு நல்லது.

கடைசியாக, நமது உடல் ஆரோக்கியத்தை தாண்டி பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டால் நமது சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள் உற்பத்தி முதல் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது வரை இது சுற்றுச்சூழலுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் துரு பிடிக்காத எக்கு அல்லது கண்ணாடி அல்லது பிபிஏ இல்லாத பிளாஸ்டிக் போன்ற தண்ணீர் பாட்டில்களுக்கு மாறுவதன் மூலம் இந்த பாதிப்பை நாம் குறைக்க முடியும்.

இது மைக்ரோ அல்லது நானோபிளாஸ்டிக்குகள் வெளிப்பாட்டை குறைப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. மேம்படுத்தப்பட்ட வடிகட்டுதல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது, நாம் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை வாங்காமல் தவிர்க்கலாம். எனவே, ஆரோக்கியமாக மற்றும் பாதுகாப்பாக இருக்க மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டிலை நாம் எடுத்துச் செல்வது என்பது சுத்தமான குடிநீரை பருகுவதோடு மட்டுமல்லாமல், உடல்நலம் தொடர்பான பல நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Packaged Drinkg Water, Doctors Explaination

பிராண்ட் முக்கியம் சூரியஒளி ஆபத்து

பிளாஸ்டிக் பாட்டில் உற்பத்தியில் பொதுவாக பயன்படுத்தப்படும் பிஸ்பெனால் ஏ போன்ற ரசாயனங்கள், பாட்டில்கள் மீது வெப்பம் அல்லது சூரிய ஒளி படும்போது அவை தண்ணீருடன் கலந்துவிடும். பிஸ்பெனால் ஏ என்பது எண்டோகிரைன் சீர்குலைவை ஏற்படுத்துவதோடு இது இனப்பெருக்க பிரச்னைகள், உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தும். இத்தகைய ரசாயனங்களை உட்கொள்வதால் ஏற்படும் நீண்டகால தாக்கம் குறித்து இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வரும் போதிலும் இவை பலவிதமான கடுமையான உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று ஆரம்பகால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அபாயங்களின் காரணமாக நுகர்வோர் பாட்டில் தண்ணீரை வாங்கும்போது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மற்றும் இந்திய தரநிலைகள் பணியகம் போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் தரங்களை கடைபிடிக்கும் பிராண்டுகளை வாங்க வேண்டும். மேலும் அவ்வாறு வாங்கும் பாட்டில்களை சூரிய ஒளி மற்றும் வெப்பம் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் தண்ணீருடன் கலக்காமல் இருக்கும் என டாக்டர் அருண் கல்யாண சுந்தரம் தெரிவித்தார்.

The post பாதுகாப்பு, நம்பகமானது என நினைக்கும் பாட்டில் குடிநீரால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன? மருத்துவர்கள் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article