புதுடெல்லி: ஏகபோக சிண்டிகேட்டில், அதானி குழுமம், செபி போன்ற முக்கிய ஒழுங்குமுறை அமைப்புகள், பாஜ இடையே அபாயகரமான கூட்டணி இருக்கிறது’ என ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.அதானி குழுமம், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய (செபி) தலைவர் மாதபி புச் இடையே தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் கட்சி தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், அக்கட்சியின் ஊடக மற்றும் விளம்பர பிரிவு தலைவர் பவன் கேரா அளித்த பேட்டியில், ‘‘செபி தலைவர் மாதபி புச் தனக்கு சொந்தமாக மும்பையில் உள்ள ப்ளாட் ஒன்றை கிரீன் வேர்ல்டு புல்ட்கான் அன்ட் இன்ப்ரா என்கிற நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் முகுல் பன்சால் இண்டியாபுல்ஸ் குழுமத்திற்கு நெருக்கமாகவும், அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாக குழுவில் ஒருவராகவும் இருக்கிறார். இண்டியாபுல்ஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளால் செபியின் கண்காணிப்பில் உள்ளது. அதனுடன் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு மாதபி புச் எதற்காக தனது ப்ளாட்டை வாடகைக்கு விட்டுள்ளார்?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதே போல், பவன் கேரா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இடையேயான 3வது கலந்துரையாடல் வீடியோ நேற்று வெளியானது. இந்த வீடியோவை வெளியிட்ட ராகுல் காந்தி தனது பதிவில், ‘‘அதானி டிஃபன்ஸ் நிறுவனம் வெளிநாட்டு ஆயுதங்களின் பெயரை மட்டுமே மாற்றுவதன் மூலம் எவ்வாறு லாபம் சம்பாதிக்கிறது என்பதை அதன் இணையதளத்திலேயே பார்க்கலாம். ஏகபோக சிண்டிகேட்டின் வளர்ச்சி இந்தியாவின் நிறுவன கட்டமைப்பில் ஆபத்தான ஆழத்தை எட்டி உள்ளது.
இந்த சிண்டிகேட்டில், அதானி, முக்கிய ஒழுங்குமுறை அமைப்புகள், பாஜ இடையே அபாயகரமான கூட்டணி நிலவுகிறது. விமான நிலையம், துறைமுகம், சிமெண்ட், மின்சாரம்… என்ற வரிசையில் அதானி எதைக் கேட்டாலும் இந்த சிண்டிகேட் ஏகபோகமாக்கிவிடுகிறது. இதற்காக, அக்னிவீரர்கள் போன்றவர்களுக்கு தரப்பட வேண்டிய பயிற்சி, பென்ஷன் உள்ளிட்டவைகளுக்கான நிதியை திருப்பி விடுகின்றனர்’’ என குற்றம்சாட்டி உள்ளார்.
The post பாதுகாப்பு துறையிலும் ஏகபோகம் அதானி குழுமம், செபி, பாஜ இடையே அபாய கூட்டணி: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.