உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 12 ஆண்டுக்கு ஒருமுறை வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை புனிதமாக இந்துக்கள் கருதுகின்றனர். இந்நிலையில் மவுனி அமாவாசை தினத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராட வேண்டும் என்று விரும்பி அதிகாலையிலேயே கூட்டம் திரண்டுள்ளது. சன்னியாசிகள் குளிக்கும் அகாரா மார்க் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியுள்ளது.
இப்படி கூட்டம் கூடியதும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக கூட்டத்தை கட்டுப்படுத்தி சிறு சிறு குழுக்களாக திரிவேணி சங்கமத்துக்கு அனுப்பி நீராட அனுமதித்து இருக்க வேண்டும். ஆனால் மாறாக போலீசார் இரும்பு தடுப்புகளை போட்டு கூட்டம் மேலும் முன்னேற முடியாதபடி முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இதனால் பின்னால் இருந்தவர்கள் முன்னால் நின்ற பக்தர்களை தள்ளிவிட்டுள்ளனர். இந்த தள்ளுமுள்ளு தாங்க முடியாமல் பல பக்தர்கள் இரும்பு தடுப்புகள் மீது ஏறி குதித்துள்ளனர்.
இப்படியாக நெரிசல் அதிகரித்து பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. பலர் கீழே விழுந்ததில் ஓடி வந்த கூட்டத்தினரின் கால்களில் மிதிபட்டுள்ளனர். இப்படி நெரிசலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். கும்பமேளாவில் பல கோடி பேர் குவிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. உ.பி. அரசு அதன் மூலம் வருவாயை கணக்கிட்டதே தவிர, பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு அடிப்படை வசதிகள் செய்வதில் அலட்சியமாக இருந்து வருகிறது. ஒரு சம்பவம் நடக்கும் முன்பு தடுக்கப்பட வேண்டும்.
நதிக்கரையில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் முன்கூட்டியே ஏற்படுத்தி இருக்க வேண்டும். விஐபிகளை அனுமதித்தாலும் பொதுமக்கள் நீராடுவதற்கும் எந்த தடையும் இல்லாமல் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால் அலட்சியத்தால் பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்துவிட்டு, உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிவிட்டால் ஆறுதல் கிடைத்துவிடாது.
பாதுகாப்பு குளறுபடிகளை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். யோகி அரசு 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்துவதாக அறிவித்துள்ளது. கும்பமேளா நிறைவு பெறுவதற்கு முன்பே 30 பேரை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். இன்னுமோர் சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். விஐபி பாஸ்களை ரத்து செய்துவிட்டால் மட்டும் போதாது.
அந்த பகுதியில் பொதுமக்கள் தடையின்றி நீராட அனுமதிக்கப்படுகிறார்களா என்றும் கண்காணிக்க வேண்டும். பிரயாக்ராஜ், அலகாபாத், கயா, திரிவேணி சங்கமம், காசி கங்கை நதி போன்ற முக்கிய இடங்களில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தனை கூட்டம் ஏன் ஒரே இடத்தில் குவிய வேண்டும் என்று விமர்சனங்கள் அவசியமற்றது. ஒரு மதத்தின் நம்பிக்கையை யாரும் புண்படுத்த கூடாது. அதே நேரம் பாதுகாப்பு என்பது நம் கையில் தான் இருக்கிறது. பக்தர்களும், அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கட்டுப்பாடுகளை மதித்து நடந்து கொண்டால் ஆன்மிக விழா ஆற்றல் மிகு விழாவாக அமையும்.
The post பாதுகாப்பில் அலட்சியம் appeared first on Dinakaran.