தண்டையார்பேட்டை: தேர்தலின்இறுதி தீர்ப்பு மக்கள் கையில்தான் உள்ளது என வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபோல் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு கடற்கரை சிக்னல் அருகே புதுமனை குப்பம் சிங்காரவேலன் நகரில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இதுதொடர்பான கள ஆய்வை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.
இதுபோல் துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலை, அண்ணா பிள்ளை தெருவில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் விளையாட்டு மைதானம் மற்றும் வால்டாக்ஸ் சாலை தண்ணீர் தொட்டி தெருவில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம், அதே பகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாளர் பிரபாகரன், சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரி சிவப்பிரகாசம், சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் பிரவீன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.பின்னர், நிருபர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: காசிமேடு புதுமனை குப்பத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குறைந்தளவு மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் தெரிவித்தனர். அந்த பகுதியில் கள ஆய்வை மேற்கொண்டோம். வாய்ப்புகள் இருக்குமானில் கூடுதலாக புதிய குடியிருப்புகள் கட்டப்படும். நவம்பர் மாதம் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் 252 பணிகளுக்கு 6039 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதன் ஒரு பகுதியாக 700 குடியிருப்புகள் 100 கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1080 கட்டுமானத்திற்கு அஸ்திவாரங்கள் போட்டு பணி நடைபெற்று வருகிறது.
வடசென்னையில் அதிக தொகைக்கு மருத்துவ வசதியை தேடி செல்லக்கூடிய நிலை இருப்பதால் இந்த இடத்தில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு பணி வேகமாக நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் நடைபெற்று வரக்கூடிய பணி அனைத்து டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பழனி முருகன் கோயிலில் அடிப்படை வசதி இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். முருக பக்தராக காவடி எடுத்துள்ளார். அதை விமர்சனம் செய்ய தயாராக இல்லை. அவர் ஏற்கனவே செலுத்திய நேர்த்திக்கடன் 48 நாட்கள் செருப்பு அணியமாட்டேன் என்றார். ஆன்மீகத்தோடு சம்பந்தப்படுத்தி அரசியல் ரீதியாக சொன்ன சொன்ன பதிலுக்கு, நேற்று நேர்த்திக்கடன் செலுத்தி இருக்கிறார்.
இந்த ஆட்சியில்தான் பழனியில் குடமுழுக்கு நடந்துள்ளது. 98 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 2010ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 50 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கு 58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிட்டிருந்தார். அதன்பிறகு வந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அரசாணை தூக்கத்தில் இருந்தது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசாணையை செயல்படுத்தி கருவூலத்திற்கு 58 கோடி ரூபாய் செலுத்தி அதற்கான திட்ட பணி மேற்கொண்டு வருகிறது. பழனியில் சென்று பாருங்கள், திருப்பதிக்கு நிகராக பழனி இல்லை என்றால் நீங்கள் என்ன கூறினாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது.
பழனியில் ஒரு நாளில் 20 ஆயிரம் பக்தர்களுக்கு 10 நாட்களுக்கு 20 லட்சம் பக்தர்களுக்கு கட்டணம் இல்லாமல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 60 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தைப்பூசத்தில் முருகனை தரிசித்து உள்ளார்கள். எங்கும் சிறு அசம்பா விதங்களும் நடைபெறாமல் நேர்த்தியாக பக்தர்கள் முருகனை தரிசனம் செய்துள்ளனர். தமிழக வெற்றிக் கழக கட்சிக்கு தமிழகத்தில் 20 சதவீதம் வாக்குகள் உள்ளது என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியது தேர்தல் களத்தில் நிற்பவர்களெல்லாம் 100 சதவீதம் வாக்கு எங்களுக்குதான் என தேர்தல் களத்திற்கு வருவார்கள். இறுதி தீர்ப்பு மக்கள் கையில்தான். தேர்தல் எப்போது என தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடனான சந்திப்பு அரசியல் அல்ல. இன்னும் தேர்லுக்கு 14 மாதங்கள் உள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.
The post தேர்தலின் இறுதி தீர்ப்பு மக்கள் கையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.