சென்னை: பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கான நிவாரணத்தைப் பெற ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய இக்கட்டான நிலை உள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா வேதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக்கூறி ரூ. 13.66 லட்சம் வசூலித்து ஏமாற்றியதாக வேலூரைச் சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜெயசிங் வசந்த் ரஞ்சித் என்பவருக்கு எதிராக கோயம்பேடு போலீஸில் புகார் அளித்திருந்தார். தனது புகார் மீது எப்ஐஆர் பதிவு செய்த போலீஸார் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை எனக்கூறி மனோகர்தாஸ் கடந்த 2022-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது 2 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டதையடுத்து இந்த வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.