திருவொற்றியூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் அருகே உள்ள சன்னதி தெருவில் பாதாள சாக்கடையில் அதிகாலையில் மழைநீர் சென்றதால் அடைப்பு ஏற்பட்டது. இதனால் பாதாள சாக்கடை மேனுவல் வழியாக கழிவுநீருடன் மழைநீர் கலந்து கொப்பளித்து குபுகுபுவென வெளியேறியது. சாலையில் கழிவுநீர் தேங்கியதால் நேற்று முன்தினம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பெரும் சிரமப்பட்டனர். பின்னர் மாலையில் மழை பொழிவது சற்று குறைந்ததால் கழிவுநீர் வெளியேறுவது தானாக நின்றது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருவொற்றியூர் பகுதிகளில் பல இடங்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும்போது அதிகமான மழைநீர் பாதாள சாக்கடைகளில் போகும்போது சீராக செல்ல முடியாமல் வெளியேறி சாலையில் தேங்குகிறது. ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவுவதாக பீதி ஏற்பட்டுள்ள நிலையில், வடிவுடையம்மன் கோயில் வாசலில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்கியதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே சன்னதி தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை முழுமையாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறி வடிவுடையம்மன் கோயில் வாசலில் ஆறாக பெருக்கெடுக்கும் கழிவுநீர்: பக்தர்கள் அவதி appeared first on Dinakaran.