உளுந்தூர்பேட்டை, அக். 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியுடன் பாண்டூர் கிராம ஊராட்சி உள்ளிட்ட 7 கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் பாண்டூர் கிராம ஊராட்சியை உளுந்தூர்பேட்டை நகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை பாண்டூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நூற்றுக்கணக்கானவர்கள் பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உளுந்தூர்பேட்டை-திருவெண்ணெய்நல்லூர் சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது பாண்டூர் ஊராட்சியை உளுந்தூர்பேட்டை நகராட்சியுடன் இணைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராம மக்களின் இந்த சாலை மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் உளுந்தூர்பேட்டை-திருவெண்ணெய்நல்லூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post பாண்டூர் கிராம ஊராட்சியை உளுந்தூர்பேட்டை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து கடும் பாதிப்பு appeared first on Dinakaran.