
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. முதல் நாளில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், கம்பம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன்பின் பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினமும் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுடன் கோவிலுக்கு வந்திருந்து கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
அதேபோல் மாரியம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று மகா மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சித்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின்னர் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிகழ்வுகளில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.