
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி. இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் வெற்றியை பெற்று தந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் சமீபத்தில் அறிவித்தனர்.
இந்த முடிவு அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவர்கள் என எதிர்பார்த்த வேளையில் இருவரும் அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தனர்.
இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ள அவர்கள் அடுத்த உலகக்கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த உலகக்கோப்பைக்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருப்பதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறியுள்ளார். தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்து நல்ல பார்மில் இருந்தால் மட்டுமே விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அவர் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அதற்கு (ஒருநாள் உலகக்கோப்பை) முன்பாக நமக்கு டி20 உலகக்கோப்பை (2026) இருக்கிறது. அது பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவில் நடக்கவிருக்கும் ஒரு பெரிய போட்டி. எனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் எங்களுடைய மொத்த கவனமும் டி20 உலகக்கோப்பையில் தான் இருக்கும். அதற்கடுத்த வருடம் 2027 உலகக்கோப்பை நடைபெறுகிறது. அந்தத் தொடருக்கு இன்னும் இரண்டரை வருடம் இருக்கிறது. நான் எப்போதும் ஒன்றை கூறி வருகிறேன். நீங்கள் தொடர்ச்சியாக அசத்தினால் வயது என்பது வெறும் நம்பர் மட்டுமே" என்று கூறினார்.