*விவசாயிகள் குற்றச்சாட்டு
பாணாவரம் : பாணாவரம் அருகே உள்ள தனியார் உரக்கடைகளில் கலப்பு உரம் வாங்க விவசாயிகளை நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது.பாணாவரம் அடுத்த மகேந்திரவாடியில் தனியார் உரக்கடை உள்ளது. இந்த கடையில் கோடம்பாக்கம், வெளிதாங்கிபுரம், பாலகிருஷ்ணாபுரம், மோட்டூர், கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் உரங்களை வாங்கி செல்வது வழக்கம்.
தற்போது, இந்த உரக்கடையில் கலப்பு உரம் வாங்கினால் மட்டுமே யூரியா உரம் வழங்கப்படும் என அடாவடியாக பேசி கூடுதல் உரம் வாங்க விவசாயிகளை நிர்பந்தப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.பணம் உள்ளவர்கள் வேறு வழியின்றி கலப்பு உரங்களை கூடுதலாக வாங்கி சென்றாலும் சிறு, குறு விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் சிறு விவசாயிகள் பாணாவரம், நெமிலி, வேடந்தாங்கல் பகுதிகளுக்கு சென்று தங்களுக்கு வேண்டிய உரங்களை மட்டும் வாங்க நெடுந்தூரம் செல்லும் நிலை உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பெரும்பாலான விவசாயிகள் யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்களுடன் சேர்த்து கலப்பு உரங்களையும் கலந்து பயிர்களுக்கு தெளிப்பது வழக்கம். ஆனால், கலப்பு உரங்களின் விலை அதிகமாக இருப்பதால் யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்களை மட்டும் பயிர்களுக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மகேந்திரவாடி உட்பட சில தனியார் உரக்கடையில் கலப்பு உரம் வாங்கினால் மட்டுமே யூரியா உரம் கிடைக்கும் என கட்டுப்பாடு விதிக்கின்றனர்.
ஏனென்றால் யூரியா உரத்தை விட கலப்பு உரத்தில் தான் வியாபாரிகளுக்கு லாபம் அதிகம். இதனால் எங்களை நிர்பந்திக்கின்றனர். மேலும், உரங்களை கூடுதல் விலை வைத்து விற்பதால் பாதிக்கப்படுகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விவசாயிகளை கூடுதல் உரம் வாங்க நிர்பந்தப்படுத்தும் உரக்கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post பாணாவரம் அருகே கலப்பு உரம் வாங்க நிர்பந்திக்கும் தனியார் உரக்கடைகள் appeared first on Dinakaran.