ஐபிஎல்லுக்கு வந்த சோதனை; எங்கள் வீரர்களை திருப்பி அனுப்புங்க.. – தெ.ஆ. தலைமை பயிற்சியாளர் அடம்

3 hours ago 3

கேப்டவுன், மே 15: ‘ஒப்பந்தப்படி, தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர்களை 26ம் தேதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும்’ என, தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கும் சூழ்நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்ததால் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. அதன் பின், சில நாட்களுக்கு முன் இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதால், வரும் 17ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் துவங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பல வீரர்கள் ஆடி வருகின்றனர்.

வரும் ஜூன் 11ம் தேதி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி துவங்கவுள்ளது. அதில் தென் ஆப்ரிக்கா ஆடுகிறது. இந்நிலையில், ஐபிஎல்லில் ஆடிவரும் தென் ஆப்ரிக்கா வீரர்களை ஒப்பந்தப்படி, வரும் 26ம் தேதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என, தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஐபிஎல், பிசிசிஐ ஆகியவற்றுடன் முதலில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மே 26ம் தேதிக்குள், எங்கள் வீரர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும். அப்படி நடக்கும்பட்சத்தில் மற்ற போட்டிகளில் எங்கள் வீரர்கள் பங்கேற்க போதிய கால அவகாசம் கிடைக்கும். எங்கள் நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் மாறவில்லை. வரும் 26ம் தேதிக்குள் தென் ஆப்ரிக்கா வீரர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நிச்சயம் நடக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஐபிஎல்லுக்கு வந்த சோதனை; எங்கள் வீரர்களை திருப்பி அனுப்புங்க.. – தெ.ஆ. தலைமை பயிற்சியாளர் அடம் appeared first on Dinakaran.

Read Entire Article