புதுடெல்லி: பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், பிரபல தொழிலதிபரும், ‘மகத்’ மருத்துவமனை மற்றும் பல பெட்ரோல் பங்க்களின் உரிமையாளருமான கோபால் கெம்கா, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டிற்கு வெளியே காரில் இருந்தபோது மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நிலத்தகராறு காரணமாக இவரது மகன் கொலை செய்யப்பட்டிருந்ததார்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, பீகார் காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தக் கொலை சம்பவம், சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள பீகாரில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ஆளும் கூட்டணி மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், ‘பாஜகவும், நிதிஷ் குமாரும் இணைந்து பீகாரை நாட்டின் குற்றங்களின் தலைநகரமாக மாற்றிவிட்டனர் என்பதற்கு தொழிலதிபர் கோபால் கெம்காவின் படுகொலையே சாட்சி.
மாநிலத்தில் குற்றச் செயல்கள் என்பது இயல்பாகிவிட்டது. கொள்ளை, துப்பாக்கிச் சூடு, கொலைகளின் நிழலில் பீகார் வாழ்கிறது. தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத இந்த அரசை மக்கள் பதவியிலிருந்து அகற்ற வேண்டும். மாநில ஆட்சியை மாற்றுவதற்கான தேர்தல் இதுவல்ல; பீகாரைக் காப்பாற்றுவதற்கான தேர்தல்’ என்று ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்தத் தாக்குதலால், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
The post பாட்னாவில் தொழிலதிபர் படுகொலை; பீகாரை குற்றங்களின் தலைநகரமாக மாற்றிய பாஜக – நிதிஷ்குமார்: ராகுல் காந்தி கடும் தாக்கு appeared first on Dinakaran.