பாட்டிகள் விட்டுச் சென்ற பலன் தரும் கஷாயங்கள்!

1 month ago 8

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய பல வியாதிகளையும் தக்க மருந்துக் கொடுத்து அதாவது பக்க விளைவுகள் ஏற்படா வண்ணம் பல அரிய மூலிகைகள் நம்மிடம் உள்ளன. இதன் மூலம் எத்தனையோ நோய்களை வீட்டிலேயே விரட்டலாம். அத்தகைய மூலிகைகளைக் கொண்டு சீக்கிரம் குணமாக கூடிய மூலிகைக் கஷாயங்கள் செய்து நம் நோயைத் தீர்க்கலாம். அப்படி வீட்டிலேயே செய்யக்கூடிய வகையில் நம் பாட்டிகள் விட்டுச் சென்ற சில மூலிகைக் கஷாயங்கள் இதோ.

வயிற்றுப் போக்கு குணமாக வில்வக் கஷாயம்

கோரைக் கிழங்கு, கொத்தமல்லி, திப்பிலி, சிறு நாகப்பூ, வல்வமரத்துப் பட்டை, அதன் வேர் இவைகளை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு 1 டம்ளர் தண்ணீர் ½ டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சி, வடிகட்டி, பெரியவர்களுக்கு 1 அவுன்ஸ் வீதமும், குழந்தைகளுக்கு சங்களவும் காலை-மாலை கொடுத்து வந்தால் ‘வயிற்றுப் போக்கு’ குணமாகும்.

காய்ச்சல் குணமாக சிற்றரத்தை கஷாயம்

சிற்றரத்தை, கோரைக்கிழங்கு, சுக்கு, சீள்தில் தண்டு, கண்டங்கத்திரி வேர் வகைக்கு 3 கிராம் அளவு எடுத்து வைத்து ஒரு சட்டியில் போட்டு லேசாக வறுத்து, 1 டம்ளர் தண்ணீர் விட்டு ½ ஆழாக்கு அளவு சுண்டக் காய்ச்சி வடிகட்டி, குழந்தைகளுக்கு ஒரு அவுன்ஸ் வீதமும் கொடுத்து வந்தால் சகல காய்ச்சலும் குணமாகும்.

உடற் சூடு தணிய நன்னாரி வேர் கஷாயம்

நன்னாரி வேர், பரங்கிச் சக்கை, கொத்தமல்லி, சோம்பு வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு 1 டம்ளர் தண்ணீர் விட்டு அரை டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை-மாலை 1 அவுன்ஸ் வீதம் தொடர்ந்து கொடுத்து வந்தால் தேகச் சூடு தணிந்து சமநிலையாய் இருக்கும்.

இருமல் குணமாக கண்டங்கத்தரி கஷாயம்

கண்டங்கத்தரி வேர், பேய்ப்புடல், நில வேம்பு, கடுகு ரோகினி, வெப்பாலை அரிசி, சந்தனத்தூள், சீந்தில் கொடி, சுக்கு, கோரைக் கிழங்கு வகைக்கு 5 கிராம் அளவு வீதம் எடுத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு 1 டம்ளர் தண்ணீர் விட்டு, ½ டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை-மாலை 1 அவுன்ஸ் வீதம் கொடுத்து வந்தால் இருமல் குணமாகும். அரோசிகம், நாவரட்சி கூட குணமாகும்.

வயிற்று வலி குணமாக வெங்காயக் கஷாயம்

வெங்காயம், சுக்கு, வசம்பு, முருங்கைப் பட்டை, பூண்டு வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு 1 டம்ளர் தண்ணீ விட்டு ½ டம்ளர் அளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை-மாலை 1½ அவுன்ஸ் வீதம் கொடுத்து வந்தால் நாள்பட்ட ‘வயிற்றுவலி’ கூட குணமாகும். ஆனால் 16 நாட்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

உடல் உஷ்ணம் தணிய வெட்டிவேர் கஷாயம்

வெட்டிவேர், பற்பாடகம், அதிமதுரம், விலாமிச்சை வேர், ஏலரிசி, சுக்கு, நன்னாரி வேர் இவைகளை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ½ டம்ளர் ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வேளைக்கு 1½ அவுன்ஸ் வீதம் காலை-மாலை தேக்கரண்டி அளவு தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் உஷ்ணம் தனிந்து சம நிலைக்கு வரும்.

ரத்த விருத்தி உண்டாக முருங்கைப்பூ கஷாயம்

முருங்கைப்பூவைக் கொண்டு வந்து சுத்தமாக ஆய்ந்து எடுத்து அதில் கைப்பிடியளவு, அதே போல கானாம் வாழையிலையிலும் கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு வதக்கி 1 டம்ளர் தண்ணீர் விட்டு ½ டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி இறக்கி வடிகட்டி அதை 1 டம்ளர் பசும் பாலில் விட்டு 5 கிராம் சீனாக் கற்கண்டும் சேர்த்துக் காலையில் மட்டும் ெதாடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வந்தால் இரத்த புஷ்டி உண்டாகும்.

வாய்ப்புண் சுகமாக மருதோன்றி வேர் கஷாயம்

மருதோன்றிச் செடியின் வேர் கொண்டு வந்து கைப்பிடி அளவு எடுத்து உரலில் போட்டு இடித்து ஒரு சட்டியில் போட்டு 1 டம்ளர் தண்ணீர் விட்டு ½ டம்ளர் அளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதைக் கொண்டு காலை-மாலை வாய்க் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும்

சிறுநீர் சம்பந்தமானகோளாறுகள் நீங்க தாமரைக் கிழங்கு கஷாயம்

தாமரைக் கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு, நாணல் வேர், நெல்லிவேர், நெருஞ்சில், கரும்பு வேர் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு 1 டம்ளர் தண்ணீர் விட்டு ½ டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி, காலை-மாலை 1½ அவுன்ஸ் வீதம் எடுத்து அத்துடன் தேக்கரண்டியளவு தேன் சேர்த்துக் கொடுத்து வந்தால் ‘நீர்ச் சுருக்கு’ குணமாகும்.

தொண்டைக் கட்டுச் சரியாக பனங்கற்கண்டு கஷாயம்

ஒரு சட்டியை அடுப்பில் வைத்து 5 கிராம் எடையளவு சீரகத்தை அதில் போட்டு சிவக்க வறுத்து அத்துடன் 10 கிராம் பனங்கற்கண்டையும் போட்டு சற்றுக் கிளறிப் பாகுபதம் வரும் சமயம் ½ டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதித்தவுடன் இறக்கி வைத்து இளஞ்சூடாக இருக்கும் போதே வடிகட்டி காலை-மாலை இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் ‘தொண்டைக் கட்டு’ குணமாகும்.

அசையும் பல் கெட்டிப்பட வெவ்வேலம் பட்டை கஷாயம்

வெவ்வேலம் பட்டை, எருக்கஞ் செடியின் வேர், சுக்கு, பிறப்பங்கிழங்கு, ஆவாரை வேர், மருக்காரை இவைகளை வகைக்கு 10 கிராம் எடையளவு எடுத்து அரைகுறையாக இடித்து ஒரு சட்டியில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, காலை-மாலை வாய்க் கொப்பளித்து வந்தால் அசையும் பற்கள் கெட்டிப்பட்டு விடும்.

இதய சம்பந்தமான கோளாறுகள் நீங்க அரசம் பட்டை கஷாயம்

அரசம் பட்டை. மடுதுப்பட்டை, வில்வமரத்துப்பட்டை இவைகள் வகைக்கு 10 கிராம் அளவு ஜாதிக்காய், இலவங்கப்பட்டை, சாதிபத்திரி, கிராம்பு, பச்ைசக் காப்பிக் கொட்டை வகைக்கு 5 கிராம் இவைகளை உரலில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் விட்டு 1 டம்ளர் அளவுக்கு சுண்ட காய்ச்சி இறக்கி வடிகட்டி வேளைக்கு 1 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இருதய சமபந்தமான சகல கோளாறுகளும் குணமாகும்.

தீராத தாகம் தீரஅ திமதுர கஷாயம்

அதிமதுரம், வெட்டிவேர். கோஷ்டம், வில்வக் கொழுந்து, கொத்தமல்லி விதை, பச்சைப் பயிறு இவைகளை அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக உடைத்து ஒரு சட்டியில் போட்டு, 1 டம்ளர் தண்ணீர் விட்டு ½ டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி, காலை-பகல்-மாலை ஆக மூணு வேளைக்கும் 1 அவுன்ஸ் வீதம் கொடுத்து வந்தால் தீராத தாகம் தீரும்.
– என்.குப்பம்மாள்

The post பாட்டிகள் விட்டுச் சென்ற பலன் தரும் கஷாயங்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article