பாட்டி வைத்திருப்பதாக பேரன் தகவல் பழங்காலத்து ராமாயண ஓலைச்சுவடிகள் கண்டெடுப்பு: இருபக்கங்களிலும் எழுதப்பட்டுள்ளது

2 hours ago 1

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பாட்டி வைத்திருப்பதாக பேரன் கொடுத்த தகவலின்பேரில், இருபக்கங்களிலும் எழுதிய பழங்காலத்து ராமாயண ஓலைச்சுவடிகளை பேராசிரியர்கள் கண்டெடுத்துள்ளனர். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி தலைமையில், காணி நிலம் மு.முனுசாமி, சித்த வைத்தியர் கோ.சீனிவாசன் மற்றும் பேராசிரியர் வெ.காமினி ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் ராமாயண ஓலைச்சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது: திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 3ம் ஆண்டு கணினித்துறை பயிலும் மோனிஷ் என்ற மாணவர் தனது பாட்டியிடம் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் இருப்பதாக தெரிவித்தார். அதன்படி வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் வன்னிய அடிகளார் நகரில் வசிக்கும் ஓய்வுப்பெற்ற ஆசிரியை எழில் என்பவரை சந்தித்தோம். அவர் சேகரித்து வைத்திருந்த 5 கட்டு ராமாயண ஓலைச்சுவடிகளை வழங்கினார்.
இதில் 5வது கட்டு ஓரளவிற்கு வாசிக்கப்பட்டது. அந்தக் கட்டில் மொத்தம் 419 ஏடுகள் உள்ளன. ஏட்டின் இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏடும் சுமார் 1.36 அடி நீளமும், 0.13 அடி அகலமும் கொண்டுள்ளன.

ஏடுகளின் இடையில் இரு துளைகள் இடப்பட்டுள்ளன. முன்னும் பின்னும் சுவடிக்கு மேல் கட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. முகப்புக் கட்டையில் ‘விறப்பதம்ம கவடன் பெஞ்சாதி நரசம்மாள் எழிதினது’ என்று எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஏட்டிலும் பக்கத்திற்கு ஏழு முதல் எட்டு அடிகள் எழுதப்பட்டுள்ளது. ஓர் அடியில் 49 முதல் 52 எழுத்துகள் வரை எழுதப்பட்டுள்ளன. சுவடியில் ராமாயணத்தின் உரைநடைப் பகுதித் தொடர்ச்சியாக உள்ளது. ராமர், லட்சுமணன் தும்பன், நிதும்பனைப் போர்க்களத்தில் கொன்ற செய்தியை ராவணனுக்குத் தெரிவிப்பதில் இருந்து தொடங்குகிறது. ஏடுகளின் முகப்புப்பக்கந்தோறும் ‘நன்றாக’ என்ற சொற்றொடருடன் பக்க எண் தமிழ் எண்ணாகத் தரப்பட்டுள்ளது. ஏடுகள் சற்றே ஒடியும் நிலையில் உள்ளன.

இவ்வோலைச் சுவட்டின் எழுத்தமைதி 250 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் 250 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓலைச்சுவடிகள் வாயிலாக ராமாயணம் வழக்கில் இருந்ததை இந்த 5 ஓலைச்சுவடிக் கட்டுகள் மூலம் அறியலாம். இவ்வோலைச் சுவடிகளில் இருந்த எழுத்துக்களைப் பல நாட்கள் செலவு செய்து, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற திருவண்ணாமலையைச் சேர்ந்த பேராசிரியர் வே.நெடுஞ்செழியன் வாசித்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பாட்டி வைத்திருப்பதாக பேரன் தகவல் பழங்காலத்து ராமாயண ஓலைச்சுவடிகள் கண்டெடுப்பு: இருபக்கங்களிலும் எழுதப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Read Entire Article