பாடாலூர் அரசு பள்ளியில் பிளஸ்2 மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

7 hours ago 2

 

பாடாலூர், ஜன. 10: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமையாசிரியை மாலதி தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் திருச்சி மண்டல இணை இயக்குனர் அருணகிரி கண்காட்சியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆறுமுக வெங்கடேஷ் கலந்துகொண்டு, மாணவ, மாணவியர் தங்களது எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப் பெண்களை மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலகத்தில் பதிவு செய்வதன் அவசியம் குறித்தும், அதற்கான வழி முறைகள் குறித்தும், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அலுவலகத்தில் அளிக்கப்படும் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி குறித்தும், உயர் கல்வியின் அவசியம் குறித்தும் விளக்கிக் கூறினார். கல்வி மேம்பாட்டு ஆலோசகர் எபினேசர் ராஜா கல்வியின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உயர் கல்வி குறித்த விளம்பர பதாகைகள் மற்றும் புத்தகங்கள் மாணவர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டது. 250 மாணவ-மாணவிகளுக்கு தொழில் தகவல் கையேட்டை திருச்சி மண்டல இணை இயக்குனர் அருணகிரி வழங்க தலைமையாசிரியை மாலதி பெற்றுக்கொண்டார். இதில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முடிவில் மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வினோத்குமார் நன்றி கூறினார்.

The post பாடாலூர் அரசு பள்ளியில் பிளஸ்2 மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article