![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39290045-7.webp)
சென்னை,
அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இளையராஜா. இசைஞானி என்று அழைக்கப்படும் இவர் 1,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு, தாங்கள் உரிமம் பெற்ற பாடல்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று "மியூசிக் மாஸ்டர்" என்ற நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் "தேவர் மகன், குணா" உள்பட 109 படங்களின் உரிமை பெற்றுள்ளதாகவும், இளையராஜா மனைவி பெயரில் உள்ள நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல்களை சமூக வலைதளங்களில் இளையராஜா வெளியிட்டு வருவதால், அதை தடை செய்ய வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள இளையராஜா, சாட்சியம் அளிப்பதற்காக பாடல்கள் உரிமம் குறித்த வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டில் இசைஞானி இளையராஜா ஆஜரானார். அதில் சுமார் 1 மணி நேரம் இளையராஜாவிடம் விசாரணை நடந்தது. அதில் "எனக்கு எத்தனை பங்களாக்கள் உள்ளது எனத் தெரியாது. சொந்தமாக ரெக்கார்டிங் ஸ்டூடியோ கிடையாது. முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால் உலகளாவிய பொருட்கள் பற்றி எனக்குத் தெரியாது. பெயர், புகழ், செல்வம் என எல்லாம் சினிமா மூலம் கிடைத்தது" என்று கூறியுள்ளார்.
மேலும், 1990களில் பாடல் ஒப்பந்தம் மேற்கொண்ட போது யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் பற்றி குறிப்பிடவில்லை என்றும் ஆடியோ ரீலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.