![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/13/39306991-chennai-15.webp)
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள காரக்குன்னு பகுதியை சேர்ந்தவர் சைமா (வயது 19). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு அரசு போட்டி தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்று வந்தார். அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சஜீர் (25) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.
இதற்கிடையே அவர்களது காதலுக்கு சைமாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவருக்கு வேறொரு நபருடன் கடந்த 3-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்திருந்தனர். இதனால் காதலரை பிரிய மனம் இல்லாமல் சைமா கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த சஜீர் மனமுடைந்து காணப்பட்டார்.
ஒரு கட்டத்தில் காதலி இழப்பை தாங்கி கொள்ள முடியாமல் கை நரம்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை குடும்பத்தினர் மீட்டு மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரியில் இருந்து யாருக்கும் தெரியாமல் சஜீர் வெளியே வந்தார்.
பின்னர் எடவன்னா பகுதிக்கு சென்று, அங்கிருந்த தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த எடவன்னா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.