பாஜவுடன் கூட்டணி அறிவித்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் மே 2ம் தேதி நடைபெறுகிறது: எடப்பாடி அறிவிப்பு

1 month ago 5


சென்னை: பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் மே 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜவுடன் அதிமுக திடீர் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த வாரம் சென்னை வந்திருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி முன்னிலையில் கூட்டணியை அறிவித்தார். ஆனால் இந்த கூட்டணியை பெரும்பாலான அதிமுக தொண்டர்களும், இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை கண்டித்து பல இடங்களில் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடியை மிரட்டி பணியவைத்து பாஜவுடன் கூட்டணியை அறிவித்து விட்டார்கள் என பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் அதிமுகவின் முக்கிய தலைவர்களும் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அடுத்த மாதம் 2ம் தேதி அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பாஜவுடன் எதற்காக அதிமுக கூட்டணியில் இணைய சம்மதித்தது என்பதை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. மேலும் அதிருப்தியில் உள்ல பல நிர்வாகிகளை இக்கூட்டத்திற்கு வரவழைத்து சமாதானம் செய்வார் என்றும் அதிமுக தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக செயற்குழு கூட்டம் வருகின்ற மே 2ம் தேதி மாலை 4.30 மணிக்கு, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பாஜவுடன் கூட்டணி அறிவித்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் மே 2ம் தேதி நடைபெறுகிறது: எடப்பாடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article