சென்னை:‘‘திமுக ஆட்சி அமைந்து இதுவரை 2700க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது, இந்தாண்டு இறுதிக்குள் அது 3000-த்தை தாண்டும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பாஜகவின் எச்.ராஜா ஒரு ஏழரை நாட்டு சனி, அவர் ஒரு மதவாத சக்தி என்று குற்றம்சாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எழும்பூர் தெற்கு பகுதி சார்பில் செனாய் நகர் வைத்தியநாதன் சாலை மற்றும் சேத்துப்பட்டு, அம்பேத்கர் திடலில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு காலை உணவு வழங்கினார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: பாஜகவின் எச்.ராஜா ஒரு ஏழரை நாட்டு சனி, அவர் ஒரு மதவாத சக்தி. திமுக ஆட்சியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மக்கள் மகிழ்ச்சியோடு உள்ளனர். திமுக ஆட்சி அமைந்து இதுவரை 2700க்கும் அதிகமான கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது, இந்தாண்டு இறுதிக்குள் அது 3000-த்தை தாண்டும். அதிமுக ஆட்சியில் அறநிலையத்துறை இருக்கிறதா, பொறுப்பு அமைச்சர் யார் என்ற கேள்வி இருந்தது. சங்கிகள் தலையிட்டு திருச்செந்தூர் கோவில் விஷயத்தை திசை திருப்புவதாகவும், ஆகம விதிகளின்படி இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோவில்களில் ஒரே ஒரு மருத்துவமனை இருந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்து 17 கோவில்களில் மருத்துவமனை அமைக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதாகவும் குற்றவாளிகள் அண்டை மாநிலங்களுக்கு ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக தமிழ்நாடு காவல்துறை உள்ளது. எதிர்பாராமல் நடக்கும் குற்றங்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது, சட்டம் ஒழுங்கு என்பது அவர்களுடைய குற்றச்சாட்டு, திமுக ஆட்சியில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது, பாஜகவினர் பல பரிட்சைக்கு வாருங்கள் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறிய அவர் அப்பாவி தொண்டர்களை தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கு கெட பாஜக முயற்சி செய்கிறது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
The post ‘‘பாஜகவின் எச்.ராஜா ஒரு ஏழரை நாட்டு சனி, அவர் ஒரு மதவாத சக்தி….” அமைச்சர் சேகர்பாபு விளாசல் appeared first on Dinakaran.