சென்னை: டாஸ்மாக் தலைமையகத்தை இன்று (மார்ச் 17) முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக பாஜக அறிவித்திருந்த நிலையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை வீட்டின் முன்பு காவலர்கள் முகாமிட்டுள்ளனர். அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் போராட்டத்துக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜக உறுப்பினர்கள் சென்னை நோக்கி வந்த நிலையில், அவர்களை காவலர்கள் தடுத்து வைத்ததாக எக்ஸ் தளத்தில் வினோஜ் பி.செல்வம் பதிவு வெளியிட்டிருந்தார். ‘இது ஜனநாயகமா?’ என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.