மும்பை: அம்பாசமுத்திரம் அம்பானி, அரசாங்கம் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் நவ்நீத் கவுர் ராணா. தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2019ம் ஆண்டு அமராவதி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பி. ஆனார். கடந்த தேர்தலில் இவர் அதே அமராவதி தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு தோற்றுவிட்டார். இவரது கணவர் ரவி ராணா, 4 முறை சுயேட்சை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து மர்ம மனிதன் நவ்நீத் கவுர் ராணாவுக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ‘‘உன்னை பற்றிய எல்லா தகவல்களும் எங்களிடம் உள்ளன. சில நாட்களுக்கு மட்டுமே பூமியில் நீ விருந்தாளியாக இருப்பாய். நாங்கள் உன்னை கொலை செய்வோம். குங்குமமும் இருக்காது. அதனை இடுபவர்களும் இருக்க மாட்டார்கள்.” இவ்வாறு மர்ம மனிதர் மிரட்டல் விடுத்துள்ளார். குங்குமம் இருக்காது என மிரட்டல்காரர் கூறியதால், இவரது கணவர் ரவி ராணாவுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக கருதப்படுகிறது.
இதுகுறித்து இருவரும் கார் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மிரட்டல் வெளிநாட்டில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதால் போலீசார் ஒன்றிய அரசின் ஏஜென்சிகளின் உதவியை நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post பாஜ முன்னாள் எம்பி நடிகை நவ்நீத் ராணாவுக்கு கொலை மிரட்டல்: பாக்.கில் இருந்து வந்தது appeared first on Dinakaran.