பாசன வேளாண்மை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு

3 hours ago 2

சென்னை,

மாநிலம் முழுவதும் உள்ள வேளாண் நிலங்களுக்கு, பாசனம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் வகையில், உலக வங்கி நிதியுதவியுடன், பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர்வளத்துறை, வேளாண், கால்நடை, மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

இத்திட்டத்தின் கீழ், கடந்த 2024-ம் ஆண்டிற்குள், 13.41 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களுக்கு பாசனத்தை மேம்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு, கடந்த 2018-ம் ஆண்டு ரூ.2 ஆயிரத்து 962 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து, திட்ட பணிகள் 2 ஆண்டுகளுக்கு மேலாக பாதிக்கப்பட்டன. பல பணிகள் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், இத்திட்டத்திற்கு வரும் நிதிஆண்டில், ரூ.305 கோடி கூடுதலாக அரசு அனுமதித்துள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

நீர்வளத்துறையின் கீழ் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் 47 துணை வடிநிலங்களில் 4.69 லட்சம் ஹெக்டேர் பாசன பரப்பு பயன்பெறும் வகையில், ரூ.2 ஆயிரத்து 962 கோடியில் உலக வங்கி நிதியுதவியுடன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயலாக்கத்தில் உள்ளது. ரூ.3,267.85 கோடி திருத்திய மதிப்பீட்டில், வருகிற டிசம்பர் 2-ந்தேதி வரை திட்டகாலத்தை நீட்டித்து செயல்படுத்துவதற்கு திருத்திய நிர்வாக அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட துணை வடிநிலங்களில் பாசன விவசாயத்தின் உற்பத்தித்திறன், காலநிலை மாற்ற தாக்கத்தை தாங்கும் சக்தி, நீர் மேலாண்மை மேம்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் வேளாண்தொழில் முனைவோருக்கான சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

இத்திட்டத்தை நீர்வளத்துறை, தொடர்புடைய துறைகளான வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடைத்துறை, மீன்வளம்-மீனவர் நலத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகிய 6 துறைகள் மற்றும் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Read Entire Article