ஊட்டி: கேத்தி-பாலாடா சாலையில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க வேகத்தடைகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஊட்டி அருகே உள்ள கேத்தயில் இருந்து பாலாடா மற்றும் சேலம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில் தினமும் ஏராளமான அரசு மற்றும் மினி பஸ்கள் சென்று வருகின்றன. மேலும், பாலாடா பகுதியிலிருந்து ஏராளமான காய்கறி லாரிகள் மேட்டுப்பாளையம் உட்பட வெளி மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன. கேத்தி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிக்கு தினமும் ஏராளமான மாணவ, மாணவிகள் வருகின்றனர். இந்நிலையில், கேத்தி பகுதியில் இருந்து பாலாடா செல்லும் சாலையில் கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அம்பேத்கர் நகர் வரை உள்ள சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நடந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், இச்சாலையில் வேகத்தடைகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் வேகமாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். எனவே, கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அம்பேத்கர் நகர் வரை உள்ள சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, தற்போது 3 இடங்களில் டேபிள் டாப் வேகத்தடைகள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இதனால், கேத்தி மற்றும் பாலாடா பகுதிகளில் உள்ள மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
The post கேத்தி-பாலாடா சாலையில் வேகத்தடை அமைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.