பாக்டீரியா கிருமி இருப்பதாக குற்றம்சாட்டி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்கு தடையா?சீனா அதிரடி

2 days ago 5

பெய்ஜிங்: பாக்டீரியா கிருமி இருப்பதாக சீனா குற்றம்சாட்டி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்கு சீனா அதிரடியாக தடை விதிக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் இருந்து கடந்தாண்டு மட்டும் சீனாவுக்கு சுமார் 4.5 மெட்ரிக் டன் கோழி, வாத்து உள்ளிட்ட பறவை இறைச்சி ஏற்றுமதியாகி செய்யப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு 720 மில்லியன் அமெரிக்க டாலராகும். இந்நிலையில், அமெரிக்க இறைச்சிகளில் சால்மொனெல்லா எனப்படும் பாக்டீரியா கிருமி இருப்பதாக சீனா குற்றம்சாட்டி இறக்குமதியை கட்டுப்படுத்தவும், தேவையெனில் முழுமையாக ரத்து செய்யவும் தயாராகி உள்ளது.

இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட இறைச்சி, முட்டையை சாப்பிடும் போது, வாந்தி, வயிற்றுப்போக்கு என உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இதை முக்கிய விஷயமாக சீனா கருதுகிறது. ஒருவேளை சீனா, அமெரிக்காவின் இறைச்சியை தடை செய்தால் அந்நாட்டு விவசாயிகள் சுமார் 500 மில்லியன் டாலர் வரை இழப்பை சந்திப்பார்கள். எனவே அமெரிக்காவுக்கு இந்த விஷயம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.

ஆனால் வரி விஷயம் காரணமாகதான் சீனா பழிவாங்குவதாக அமெரிக்க ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். சீனாவில் இருந்து தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஒரு காலத்தில் அமெரிக்காவில் குவிந்திருந்தது. அந்த பொருட்களை டிரம்ப், தடை செய்தது மட்டுமின்றி கூடுதலாக வரியையும் விதித்தார். இப்படியாக வரி போர் தொடங்கியது. பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும் வரி விதிக்க இப்போது சீனா 125 சதவீதமும், அமெரிக்கா 145 சதவீதமும் பரஸ்பர வரியை விதித்துள்ளனர்.

மற்ற நாடுகளுக்கும் டிரம்ப் வரியை விதித்திருக்கிறார். அவைகள் தற்போது, 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், சீனாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கவில்லை. அதனால் சீனா கடும் ஆத்திரமடைந்தது. எப்படியெல்லாம் தாக்குதல் நடத்த முடியுமோ அப்படி தாக்குதல் நடத்த சீனா தயாராகி வருகிறது. எனவேதான் தற்போது உணவு விஷயத்தில் அந்நாடு கையை வைத்துள்ளது என்று பலரும் கூறுகின்றனர்.இந்த சூழலில், வர்த்தகத்தை பெருக்கும் விதமாகவும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், மலேஷியா, கம்போடியாவிற்கு சீன அதிபர் ஷீ ஜின்பிங் பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலாவதாக நேற்று வியட்நாம் சென்ற அவர், அந்நாட்டு பிரதமர் பாம் மின் சின்னை சந்தித்து பேசினார். வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். பின், இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரு நாடுகளும் பலதரப்பு வர்த்தக அமைப்பு, நிலையான உலகளாவிய தொழில்துறை மற்றும் வினியோக சங்கிலிகள் மற்றும் சர்வதேச சூழலை உறுதியாக பாதுகாக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஜி ஜின்பிங், தன் கருத்தாக, ‘வரிப்போரில் யாரும் வெற்றியாளர்கள் இல்லை’ என்றார். இதையடுத்து, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் டோ லாம் உள்ளிட்டோரை ஜி ஜின்பிங் சந்தித்து பேசினார். தொடர்ந்து மலேஷியா, கம்போடியா நாடுகளுக்கு அவர் செல்ல உள்ளார். இந்த நெருக்கடியான சூழலில், சீனாவின் முடிவு எப்படி இருக்கும் என்பதை இந்த சந்திப்பு உணர்த்துவதாக அரசியல்நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

The post பாக்டீரியா கிருமி இருப்பதாக குற்றம்சாட்டி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிக்கு தடையா?சீனா அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article