பூஞ்ச்: பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களின் பிரச்னையை தேசிய அளவில் எடுத்துரைப்பதாகவும் உறுதி அளித்தார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து கடந்த மாதம் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாள் போர் மூண்டது. அந்த சமயத்தில் பாகிஸ்தான் துருப்புகள் எல்லை தாண்டி ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், காஷ்மீரின் எல்லையோர கிராமப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பூஞ்ச் மாவட்டத்தில் 13 பேர் பலியாகினர்.
இந்நிலையில், பூஞ்ச் மக்களை சந்திக்க மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று காஷ்மீர் சென்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்ற ராகுல் காந்தி, ஜம்மு விமான நிலையத்தை அடைந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பூஞ்ச் பகுதிக்கு சென்றார். பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலால் சேதமடைந்த குடியிருப்புகள், குருத்வாரா உள்ளிட்ட மதவழிபாட்டுத் தலங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, பலரும் பாகிஸ்தான் ராணுவத்தின் குண்டுவீச்சில் இருந்து உயிர் தப்பிய பயங்கரமான நிகழ்வுகளை ராகுலிடம் விவரித்தனர். தங்கள் குடும்பத்தினர், உறவினர்களை இழந்த சோகத்தை பகிர்ந்து கொண்டனர். மேலும், சேதமடைந்த வீடுகளுக்கு கூடுதல் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினர். சுமார் 1 மணி நேரம் அவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘‘இது ஒரு பெரிய சோகம். பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்களை இலக்காக வைத்து நேரடியாக தாக்கியுள்ளது. நான் மக்களிடம் பேசி, அவர்களின் பிரச்னைகளை அறிந்து கொண்டேன். அவர்களின் பிரச்னைகள், கோரிக்கைகளை தேசிய அளவில் எழுப்பச் சொன்னார்கள். அதை நான் செய்வேன்’’ என்றார்
மேலும், ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘பூஞ்சில் பாகிஸ்தான் துருப்புக்களின் ஷெல் தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்தேன். சேதமடைந்த வீடுகள், சிதறிய உடைமைகள், ஈரமான கண்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த வேதனையான கதைகளை கேட்டறிந்தேன். இந்த தேசபக்தியுள்ள குடும்பங்கள் ஒவ்வொரு முறையும் தைரியத்துடனும் கண்ணியத்துடனும் போரின் மிகப்பெரிய சுமையைத் தாங்குகின்றன. அவர்களின் தைரியத்திற்கு வணக்கம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்.
தேசிய அளவில் அவர்களின் கோரிக்கைகளையும் பிரச்னைகளையும் நிச்சயமாக எழுப்புவேன்’’ என்றார். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி.ஏ.மிர் ஆகியோர் உடன் சென்றனர். முன்னதாக, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்திக்க கடந்த ஏப்ரல் 25ம் தேதி நகருக்கு சென்ற ராகுல் காந்தி, பாகிஸ்தான் பூஞ்ச் பகுதி மக்களை சந்திக்க 2வது முறையாக நேற்று காஷ்மீருக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
* மாணவர்களுக்கு தைரியம் கூறினார்
பூஞ்ச் பகுதியில் உள்ள கிறிஸ்ட் கான்வென்ட் பள்ளி மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் 12 வயதான இரட்டையர்கள் ஜைன் அலி, உர்வா பாத்திமா பலியாகினர். அப்பள்ளிக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, பலியான மாணவர்களின் நண்பர்கள் உள்ளிட்டோரை சந்தித்து தைரியம் கூறினார். மாணவர்களிடம் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘நீங்கள் ஆபத்தைக் கண்டிருக்கிறீர்கள். பயமுறுத்தும் சூழ்நிலையை பார்த்திருக்கிறீர்கள். ஆனால் கவலைப்படாதீர்கள். எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பும். இப்பிரச்னைக்கு நீங்கள் பதிலளிக்க, மிகவும் கடினமாக படிக்க வேண்டும், விளையாட வேண்டும், பள்ளியில் நிறைய நண்பர்களை உருவாக்க வேண்டும். நீங்கள் அதை செய்வீர்களா? நல்லது. உங்கள் அனைவரையும் கட்டியணைக்கிறேன். உங்களை நேசிக்கிறேன். நன்றி’’ என்றார். மாணவர்கள் அனைவரும் கைதட்டி ராகுலை வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.
The post பாக். ராணுவத்தின் எல்லைதாண்டிய தாக்குதலால் காஷ்மீரில் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்: தேசிய அளவில் எடுத்துரைப்பதாக உறுதி appeared first on Dinakaran.