சென்னை, மே 25: கோடை காலங்களில் தேர்வு மற்றும் கல்லூரி விடுமுறை காரணமாக ரத்த தானம் குறைந்து காணப்படும். இதனால், விபத்து மற்றும் பல்வேறு சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் ரத்த தேவையை கருத்தில் கொண்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வேண்டுகோளின் பேரில், சென்னை காவல் துறை சார்பில் ரத்ததான முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் ஆணையர் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி வழிகாட்டுதலின் பேரில், பரங்கிமலை ஆயுதப்படை 2வது வளாகத்தில் சிறப்பு ரத்த தான முகாம் நேற்று நடந்தது. இந்த சிறப்பு ரத்த தான முகாமில் காவல்துறையில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 110 ஆண் காவலர்களும், 16 பெண் காவலர்களும், 4 காவலர் குடும்பத்தினரும் என மொத்தம் 130 காவலர்கள் ரத்த தானம் செய்தனர். விடுமுறை காலத்தில் வழங்கப்படும் இந்த ரத்ததானம், பல உயிர்களை காப்பதில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவசர காலங்களிலும், உடனடியாக ரத்த தேவைகள் அதிகம் இருக்கும் சந்தர்ப்பங்களிலும் இது மிகவும் உதவியாக இருக்கும் என்று ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் சென்னை காவல் துறையினைரை வெகுவாக பாராட்டினர்.
The post காவல்துறை சார்பில் ரத்த தான முகாம் appeared first on Dinakaran.