அலகாபாத்: ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷமிட்டவருக்கு ஜாமீன் மறுத்த அலகாபாத் உயர் நீதிமன்றம், ‘தேசவிரோத செயல்களை சகித்துக்கொள்ள முடியாது’ என்று காட்டமான கருத்தை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம், புலந்த்சாகரைச் சேர்ந்த அன்சார் அகமது சித்திக் (62) என்பவர், கடந்த மே மாதம் 3ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற வாசகத்துடன் கூடிய சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர் மீது, பிஎன்எஸ் சட்டத்தின் கீழ், தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவித்தல் மற்றும் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தரப்பில், தனது வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்னைகளைக் காரணம் காட்டி ஜாமீன் கோரப்பட்டது. ஆனால் அரசு தரப்போ, ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது என்றும், இது மத அடிப்படையில் பயங்கரவாதத்தை அவர் ஆதரிப்பதையே காட்டுகிறது என்றும் கூறி ஜாமீனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சித்தார்த், சித்திக்கிற்கு ஜாமீன் வழங்க திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவர் தனது உத்தரவில், ‘தேசவிரோத மனப்பான்மை கொண்டவர்களின் இதுபோன்ற செயல்களை நீதிமன்றங்கள் தாராளமாகவும், சகிப்புத்தன்மையுடனும் அணுகுவதால்தான், இத்தகைய குற்றங்கள் வாடிக்கையான நிகழ்வாக மாறி வருகின்றன’ என்று அவர் காட்டமாகக் குறிப்பிட்டார்.
மேலும், ‘மனுதாரரின் செயல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மாண்புகளையும் அவமதிப்பதாகவும், நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுவதாகவும் உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் அரசியலமைப்பை மதித்து, நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்த கடமைப்பட்டவர். எனவே, இந்த நிலையில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது சரியல்ல’ என்று கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கீழ் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.
The post ‘பாக். ஜிந்தாபாத்’ என கோஷமிட்டவருக்கு ஜாமீன் மறுப்பு; தேசவிரோத செயல்களை சகித்துக்கொள்ள முடியாது: அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டமான கருத்து appeared first on Dinakaran.