துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியாக துபாயில் இன்று நடக்கும் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா – முகமது ரிஸ்வான் தலைமையைிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்களால் அதிக முக்கியத்துவம் அளித்து பார்க்கப்படும் போட்டியாக இது அமைந்துள்ளது. இப்போட்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) எதிர்ப்பால் பாகிஸ்தானில் உள்ள ஸ்டேடியங்களுக்கு மாற்றாக துபாயில் உள்ள சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. போட்டியை காண்பதற்கான 25,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.
பெரும்பாலான டிக்கெட்டுகளை இந்தியாவை சேர்ந்த ரசிகர்களே வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கோடிக்கணக்கானோர் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் மூலம் பேரார்வத்துடன் காணக் காத்திருக்கும் போட்டியாக இது அமைந்துள்ளது.நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணிக்கு இப்போட்டியில் வென்று தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதே சமயம், 140 கோடி இந்தியர்களின் விளையாட்டு வேட்கையை தீர்க்கும் வகையில் வென்று சாதிக்கும் கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டி கராச்சியில் நடந்தது. அதில் நியூசிலாந்து அணியுடன் மோதிய பாகிஸ்தான் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பாக். ரசிகர்களின் மனதை நோகச் செய்தது. இன்னொரு தோல்வியை அந்த அணி எதிர்கொண்டால் அரையிறுதி வாய்ப்பு கானல் நீராகவே மாறும். அதேசமயம் இந்திய அணி தன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனது பேராண்மையை நிரூபித்துக் காட்டியுள்ளது.
அதன் வெற்றி ஓட்டம் இன்றைய போட்டியிலும் சிறுத்தையாய் சீறிப் பாயும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உள்ளனர். சமீத்தில் இந்தியா எதிர்கொண்ட போட்டிகளை கருத்தில் கொண்டு பார்த்தால் அதன் கை ஓங்கியிருப்பது தெள்ளத் தெளிவு.பாகிஸ்தானுடன் இந்தியா மோதிய ஒட்டு மொத்த ஒரு நாள் போட்டிகளை கணக்கில் கொண்டால் பாக். அணி முன்னிலை பெறுகிறது. 135 போட்டிகளை இந்த இரு அணிகளும் எதிர்கொண்டுள்ளன. அவற்றில் 73ல் பாக்.கும் 57ல் இந்தியாவும் வென்றுள்ளன. 5 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.
கடந்த 2010ம் ஆண்டுக்கு பின், ஒரு நாள் போட்டிகளில் இந்தியா மிகப்பெரும் வல்லமையாக உருவெடுத்துள்ளது. பாக்.குடன் மோதிய 17 போட்டிகளில் 12ல் இந்தியா அபார வெற்றி கண்டுள்ளது. 4ல் தோல்வி கிடைத்தது. ஒன்றில் முடிவு கிடைக்கவில்லை.சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளை பொறுத்தவரை 3-2 என்ற கணக்கில் பாக். முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2017ல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாக். 180 ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியே, அதன் மகத்தான வெற்றியாக இதுவரை திகழ்ந்து வருகிறது.
மாறாக, துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டிகள் இந்தியாவுக்கு சாதகமாகவே அமைந்து வருகின்றன. பாக்.குடன் இங்கு நடந்த 2 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி வாகை சூடியுள்ளது. எனவே, இன்று நடக்கும் போட்டியிலும் இந்தியாவின் கை ஓங்கியே இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர். எனவே, இன்றைய போட்டி கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்து நிற்கக் கூடிய பேசுபொருளாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இந்தியா – பாகிஸ்தான் இதுவரை…
* முதல் ஒருநாள் உலக கோப்பை (1975) முடிந்து 3 ஆண்டுகள் கழித்துதான் 1978ம் ஆண்டு இரு அணிகளும் ஒருநாள் ஆட்டத்தில் முதல் முறையாக மோதின.
* பாகிஸ்தானில் நடந்த அந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 4 ரன் வித்தியாசத்தில் வென்றது.
* இதுவரை இந்த 2 அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த 135 ஒரு நாள் போட்டிகளில் பாக். 73, இந்தியா 57போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 5 போட்டிகள் கைவிடப்பட்டன.
* இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இன்னொரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
* இரு அணிகளும் கடைசியாக 2023ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக கோப்பையில் மோதின. அகமதாபாத்தில் நடந்த அந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது.
* இரு நாடுகளுக்கும் இருக்கும் பகை, வெறுப்புணர்ச்சி காரணமாக இந்தியா, 2006ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த ஒருநாள் தொடருக்கு பிறகு பாகிஸ்தான் சென்றதில்லை.
* பாகிஸ்தானும் 2005ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா வந்து ஒருநாள் தொடர்களில் விளையாடியதில்லை.
* அதே நேரத்தில் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக, ஆசிய கோப்பை என ஐசிசி தொடர்களில் விளையாட பாகிஸ்தான் வந்து சென்றுள்ளது.
* இந்தியா கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை, இந்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றில் விளையாட அங்கு செல்ல மறுத்து விட்டது.
* கிரிக்கெட் அரங்கில் பிசிசிஐ செல்வாக்கு காரணமாக இந்தியா விளையாட வேண்டிய ஆசிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடந்தன. இப்போது துபாயில் நடக்கிறது.
The post பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா: சிங்க நடைபோட்டு சிகரத்தில் ஏறுமா? appeared first on Dinakaran.