பெங்களூர்: கர்நாடகா மாநிலம் மங்களூரை அடுத்த குடுப்பு என்ற கிராமத்தில் கடந்த மாதம் 27ம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளின் போது, திடீரென பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒரு வாலிபர் கோஷமிட்டதால் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்ட இளைஞரை 20க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கினர். இதில் நிலை குலைந்த வாலிபர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மங்களூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதில், அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர், கேரளா மாநிலம் வயநாடு சுல்தான்பத்தேரியை சேர்ந்த அஷ்ரப் என தெரியவந்தது. மங்களூரில் தங்கி கூலி வேலை செய்து வந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டதாக கூறி அடித்தே கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடுவது தேச துரோக செயல் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், வாலிபர் படுகொலை சம்பவத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் விசாரணை நடத்தப்படும். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிடுவது தேச துரோக செயல்தான். ஏற்க முடியாது’ என்றார். இச்சம்பவம் கர்நாடகா மற்றும் கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post பாகிஸ்தான் வாழ்க என கோஷமிட்டதால் ஆத்திரம்; கர்நாடகாவில் கேரளா வாலிபர் அடித்து கொலை; 20 பேர் கைது: சித்தராமையா எச்சரிக்கை appeared first on Dinakaran.