
டெல்லி,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
மேலும், இரு நாடுகளும் பரஸ்பரம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இரு நாடுகள் இடையேயான தூதரக உறவு, வர்த்தகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர், சினிமா பிரபலங்களின் சமூகவலைதள கணக்குகளை இந்தியா முடக்கியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் எக்ஸ் வலைதள கணக்கை இந்தியா முடக்கியுள்ளது. பாகிஸ்தான் தெக்ரி இ இன்சப் கட்சி தலைவரான இம்ரான்கானின் எக்ஸ் பக்க கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது. அதேபோல், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரியின் எக்ஸ் கணக்கையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.