
ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் மற்றும் இந்தி வாணி கபூர் நடிக்கும் 'அபிர் குலால்' படம் வரும் மே 9 அன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இப்படம் இரண்டு நாடுகளின் எல்லைகளைக் கடக்கும் ஒரு காதல் கதையை மையமிட்டு எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் பவாத் கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடிக்கிறார். இது தவிர, சோனி ரஸ்தான், பரிதா ஜலால், லிசா ஹேடன் மற்றும் ராகுல் வோஹ்ரா ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஆர்த்தி எஸ். பக்ரி இயக்கியுள்ளார்.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் மற்றும் அவரின் 'அபிர் குலால்' படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல்கள் எழுந்துள்ளன.பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடித்துள்ள 'அபிர் குலால்' திரைப்படம் இந்தியாவில் வெளியிட அனுமதிக்கப்படாது என்று இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் நடிகர்பவாத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.