
அமராவதி,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.
எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இதனை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்த நிலையில், நேற்றைய தினம் இருநாடுகளும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தன.
ஆனால் நேற்று இரவு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது.
இந்த தாக்குதலின்போது காஷ்மீர் எல்லையையொட்டி அமைந்துள்ள ஆர்.எஸ்.புரா பிரிவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ வீரர் முரளி நாயக் உயிரிழந்தார். இவர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
முரளி நாயக் உயிரிழந்த தகவலை இந்திய ராணுவம் உறுதி செய்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்தார். மேலும் ஆந்திர அரசு சார்பில் முரளி நாயக்கின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.50 லட்சம் நிவாரணம், 5 ஏக்கர் நிலம், வீடு கட்ட ஒரு கிரவுண்ட் நிலம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், முரளி நாயக்கின் உடல் அவரது சொந்த ஊரான கல்லி தண்டா கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பவன் கல்யாண், அரசு அறிவித்த இழப்பீடு தவிர, தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.25 லட்சம் நிவாரணம் தருவதாக அறிவித்தார்.
உயிரிழந்த முரளி நாயக், அக்னிவீர் திட்டத்தின் கீழ் கடந்த 2022-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். அவரது உடல் முழு அரசு மரியாதை மற்றும் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.