
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான சமூக ஊடக பதிவுகளை வெளியிட்ட 2 பேர் சமீபத்தில் கம்ரூப் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் கைது செய்யப்பட்டனர். அவர்களில், முகமது தில்பார் உசைன் என்பவரை சோனித்பூர் போலீசார் கைது செய்தனர். ஹபிசூர் ரகுமான் கம்ரூப் என்பவரை கம்ரூப் போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், பாகிஸ்தானுக்கு கருணை காட்டும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்ட தேச விரோதிகள் 81 பேர் இன்று வரை (ஜூன் 1) கைது செய்யப்பட்டு உள்ளனர் என பதிவிட்டு உள்ளார்.
எங்களுடைய அமைப்புகள் தொடர்ச்சியாக, தேச விரோத பதிவுகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்து உள்ளார். பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு பற்றி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள், அசாம் உள்பட 8 மாநிலங்களில் 15 இடங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2023-ம் ஆண்டு முதல் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் என்.ஐ.ஏ. அமைப்பு இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தது. இதனை தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
டெல்லி, மராட்டியம் (மும்பை), அரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து விசாரணை நீடித்து வருகிறது.