
துபாய்,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப் - ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன.
நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் - பி பிரிவில் இங்கிலாந்து அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. அந்த பிரிவிலிருந்து ஆஸ்திரலியா அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த தொடரில் இந்திய அணி தனது ஆட்டங்களை துபாயில் மட்டும் விளையாடி வருகிறது. இது இந்திய அணிக்கு மிகவும் சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை நியூசிலாந்தை சந்திக்கிறது.
இந்நிலையில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் துபாயில் நடைபெறுவதை குறித்து பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை என நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அது முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து அதைப் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. சொல்லப்போனால் அது ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தும் விஷயமாகும். தனிப்பட்ட முறையில் எனக்கு வித்தியாசமான மைதானத்திற்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை கண்டறிவது மிகவும் பிடிக்கும்.
எனவே, இந்த சூழ்நிலைகளை கற்றுக்கொண்டு நன்றாக விளையாடுவதைத் தவிர்த்து வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. முடிந்தளவுக்கு இங்குள்ள பிட்ச்க்கு எங்களை வேகமாக உட்படுத்திக்கொள்ள நாங்கள் முயற்சிக்க வேண்டும். அது போக பல்வேறு வகையான ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் எங்களிடம் இருக்கிறது. பாகிஸ்தான் ஆடுகளங்களில் நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடினோம்.
எந்த வகையான ஆடுகளத்திலும் அசத்துவதற்கு தேவையான சமநிலை பொருந்திய அணி எங்களிடம் இருக்கிறது. எனவே, துபாயில் எங்கள் முன்னே இருக்கும் சூழ்நிலைகளில் நாங்கள் தொடர்ந்து அசத்துவோம் என்று நம்புகிறோம். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் நாங்கள் மகத்தான வெற்றியைப் பெற்ற தன்னம்பிக்கையுடன் இங்கே வந்துள்ளோம்.
ஐ.சி.சி தொடரில் இந்தியாவை எதிர்கொள்வது கண்டிப்பாக மிகவும் பெரிய போட்டி. இதில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்பாக நாங்கள் நிறைய உத்வேகத்தை எடுத்துச் செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.