
புதுடெல்லி,
பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்ததால், அதனை அடக்க இந்திய ராணுவமும் களத்தில் இறங்கியது. பாகிஸ்தானின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, உயர் அதிகாரிகளுடன் நேற்று இரவு முக்கிய ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில் பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாத் மற்றும் முக்கிய நகரங்களான ராவல்பிண்டி, கராச்சி, பெஷாவரிலும் ஏவுகணை தாக்குதலை இந்தியா தொடங்கியது. மேலும் லாகூரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் வீடு அருகே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டன. இதையடுத்து அவரும், அவருடைய குடும்பத்தினரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்களை இந்தியப் படைகள் முறியடித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. வெடிகுண்டுகளுடன் பல டிரோன்களை அனுப்பி இந்தியாவின் மேற்கு எல்லையை தாக்க பாகிஸ்தான் முயற்சி செய்தநிலையில், பாகிஸ்தானின் அனைத்து விதமான அத்துமீறல்களுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் தனது எக்ஸ் வலைதளத்தில், "பாகிஸ்தான் ஆயுதப்படைகள் நேற்று (மே 08ம் தேதி) மற்றும் இன்று நள்ளிரவு (09-05-2025) முழு மேற்கு எல்லையிலும் டிரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தின. ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் ஏராளமான போர்நிறுத்த மீறல்களையும் (CFV) மேற்கொண்டன.
டிரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன, மேலும் CFV களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இந்திய ராணுவம் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. அனைத்து தீய நோக்கங்களுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.