
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதை தணிப்பதற்கு உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதேநேரம் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலான செயல்களில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணையான 'அப்தலி'யை பாகிஸ்தான் பரிசோதித்தது. 450 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் திறன் பெற்ற இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாக்கியதாக ராணுவம் கூறியுள்ளது.
வீரர்களின் தயார் நிலையை உறுதி செய்யவும், தொழில்நுட்ப திறனை மதிப்பிடவும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக கூறியுள்ள ராணுவம், 'சிந்து பயிற்சி'யின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானின் இந்த ஏவுகணை பரிசோதனைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. போர் பதற்றத்துக்கு மத்தியில் நடந்துள்ள இந்த பரிசோதனை அப்பட்டமான ஆத்திரமூட்டும் செயல் எனவும், பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டியுள்ளது.