
தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும், மதுவிலக்கு துறையின் இன்றைய அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.
இந்த நிலையில் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், பா.ஜ.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் இன்று காலை முதல் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எச். ராஜா மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோரின் வீடுகளுக்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சென்னையை அடுத்த அக்கரையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் அலுவலக போராட்டத்தில் பங்கேற்பதற்காக அண்ணாமலை, களத்தூரில் உள்ள வீட்டில் இருந்து எழும்பூர் நோக்கி சென்றார். இந்த நிலையில் பாதி வழியில் சென்னையை அடுத்த அக்கரையில் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.