
மும்பை,
அண்மையில் முடிவடைந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் வென்ற இந்தியா 12 வருடங்கள் கழித்து சாம்பியன்ஸ் கோப்பையை முத்தமிட்டது. இந்த வெற்றிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.
இந்த தொடருக்கு முன்னதாக சுமாரான பார்மில் விளையாடியதால் பெரும் சரிவை சந்தித்த அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று சொந்த நாட்டு ரசிகர்களாலே விமர்சிக்கப்பட்டனர். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் அற்புதமாக விளையாடிய இருவரும் தங்களை மீண்டும் ஒருமுறை இந்த உலகிற்கு நிரூபித்துள்ளனர்.
இந்நிலையில் விராட் கோலி, ரோகித் மட்டுமல்லாமல் ஜஸ்பிரித் பும்ரா இல்லாமலும் இந்தியாவால் எந்தக் கோப்பையையும் வெல்ல முடியும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் அந்தளவுக்கு இந்திய கிரிக்கெட்டில் திறமையான இளம் வீரர்கள் நிறைந்திருப்பதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றது ஆஸ்திரேலியாவில் சந்தித்த தோல்விக்கு பின் கிடைத்த இனிப்பான வெற்றியாகும். அத்தொடரில் இந்தியா முதல் போட்டியில் வென்றும் அடுத்த 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த விதம் நம்முடைய திறமையின் பலத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இல்லை. அந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ராவை நாம் அதிகம் சார்ந்திருந்தோம். கடைசிப் போட்டியில் பும்ரா இல்லாததால் ஆஸ்திரேலியா தொடரை வென்றது.
ஆனால் அடுத்ததாக நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் வெற்றி பெற்றது இந்தியா எந்தளவுக்கு திறமையைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டியது. அந்த தொடர்களிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பும்ரா இல்லாமல் இந்தியா வென்றது.
அது இந்த விளையாட்டில் யாரும் இன்றியமையாதவர்கள் கிடையாது என்பதை வலியுறுத்துகிறது. கடந்த காலங்களிலும் ரோகித், விராட் இல்லாமல் இந்தியா கோப்பைகளை வென்றுள்ளது. அதே சமயம் அவர்கள் இருப்பது அணியை பலமாக்குகிறது என்பதில் சந்தேகமில்லை. தற்போது துபாய் மட்டுமின்றி எங்கு விளையாடினாலும் இந்தியா வென்றிருக்கும் என்று நிறைய வெளிநாட்டு வீரர்கள் சொல்வதைப் பார்ப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறினார்.