
புதுடெல்லி,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கான எத்தியோப்பியா தூதர் பிஸ்ஸெஹா ஷாவெல் கெப்ரே பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாட்டுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறும்போது, இந்த பயங்கரவாத செயலுக்கு எத்தியோப்பியா கண்டனம் தெரிவிக்கின்றது. இந்தியா பொறுப்பான முறையில் பதிலடி கொடுத்துள்ளது. அதனை தீவிரப்படுத்தவில்லை. இந்தியர்கள் பாகிஸ்தானுக்கு சென்று சிக்கலை உண்டு பண்ணவில்லை. பாகிஸ்தானியர்களே சிக்கல் ஏற்படுத்துவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
அவர்கள் மக்களின் மதம் என்னவென்று அடையாளம் கண்டுள்ளனர். இது பயங்கரம். இது ஏற்று கொள்ள முடியாதது. இந்தியாவை போன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியாவும், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி வருகிறது. இந்த மாத இறுதியில் இந்தியாவில் இருந்து குழுவினர் எங்களுடைய நாட்டிற்கு வருகிறார்கள் என கூறியுள்ளார்.