
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இன்று (30/04/2025) திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் ரூ.197 கோடி மதிப்பீட்டில் நிலக்கரி பெர்த் 3-ல் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக இரண்டு நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாட்டினை கூடுதல் தலைமைச் செயலாளர்/ தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இந்த நிலக்கரி இறக்கும் இயந்திரங்கள் 1,20,000 டி. டபள்யு. டி. கொள்ளளவு திறன் கொண்ட கப்பலில் இருந்து நிலக்கரியை இறக்க இயலும். ஒவ்வொரு நிலக்கரி இறக்கும் இயந்திரங்களும் மணிக்கு 2,600 டன் நிலக்கரியை இறக்கும்திறன் கொண்டது. இந்த இயந்திரங்கள் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையத்திற்காக நிறுவப்பட்டிருந்தாலும், இந்த பெர்த் மூலமாக வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-3-ன் பாய்லர் பங்கர்களுக்கு நேரடியாக கொண்டு செல்ல முடியும். மேலும், இந்த இயந்திரங்கள் மூலம் வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-1 மற்றும் 2-ன் நிலக்கரி கிடங்கு மற்றும் பாய்லர் பங்கர்களுக்கும் கொண்டு செல்வதற்கான சிறப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் நிறுவும் பணிக்காலம் 24 மாதங்களாக இருந்தபோதிலும், 22 மாதங்களிலேயே பணிகள் முழுமையாக முடிவுபெற்று செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதன் மூலம் வடசென்னை அனல் மின் நிலையங்களின் நிலக்கரி கையாளும் செயல்பாட்டில் தமிழ்நாடு மின்வாரியத்தின் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல் ஆகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.