காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் எல்லையில் தொடர்ந்து 10வது நாளாக போர் நிறுத்த மீறல் நடக்கும் நிலையில், அங்கு துப்பாக்கி சூடு அதிகரித்து வருகிறது. கடந்த ஏப். 22ம் தேதியில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் தொடர்ந்து கடந்த ஒன்பது நாட்களாக எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இன்றுடன் கடந்த 10 நாட்களில் மிகப்பெரிய மோதலாக உருவாகவில்லை என்றாலும் அவ்வப்போது போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்கள், 2021, 2003ம் ஆண்டுகளில் போட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளன. நேற்றிரவு முதல் இன்று வரை குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ராஜவுரி, மெந்தர், நவ்ஷேரா, சுந்தர்பனி மற்றும் அக்னூர் பகுதிகளில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் தரப்பு இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி தாக்குதல் கொடுத்தது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது, அட்டாரி எல்லையை மூடியது போன்ற பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் தரப்பில், அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தது. இதற்கிடையில், ஐ.நா. மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள், இரு நாடுகளையும் போர் பதற்றத்தை தணிக்குமாறு வலியுறுத்தியுள்ளன. இருப்பினும், எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பதுங்கு குழிகளை தயார் செய்து வருவதாகவும், பயிர் அறுவடை தொடர்ந்து நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் எல்லையில் 10வது நாளாக போர் நிறுத்த மீறல்: தொடர்ந்து துப்பாக்கி சூடு நடப்பதால் அச்சம் appeared first on Dinakaran.