பஹல்காம் தாக்குதலுக்கு 4 நாட்களுக்கு முன்பு ‘பேதாப்’ பள்ளத்தாக்கில் சுற்றித் திரிந்த தீவிரவாதிகள்: கேரள சுற்றுலா பயணியின் கேமராவில் பதிவு

2 weeks ago 5

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு 4 நாட்களுக்கு முன்பு ‘பேதாப்’ பள்ளத்தாக்கில் சுற்றித் திரிந்த தீவிரவாதிகள் ெதாடர்பான வீடியோ காட்சிகள் கேரள சுற்றுலா பயணியின் கேமராவில் பதிவாகி உள்ளதால், அதனை அவர் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த ஜித் ரமேசன் என்பவர், கடந்த 18ம் தேதி தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக காஷ்மீருக்கு சென்றிருந்தார். சுற்றுலா பகுதிகளுக்கு தனது குடும்பத்தினரை அழைத்து சென்றார். அவர் தனது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து கொண்டிருந்தபோது, ​​அந்த வழியாகச் சென்ற தீவிரவாதிகளும் அவரது வீடியோவில் சிக்கினர்.

பஹல்காம் நகரத்திலிருந்து ஏழரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேதாப் பள்ளத்தாக்கு என்ற சுற்றுலா தலத்திலிருந்து படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் இவையாகும். அவர் தனது மகளின் நடன வீடியோவை இங்கே படம்பிடித்துக்கொண்டிருந்தபோது, ​​அந்த வழியாகச் சென்ற தீவிரவாதிகளின் உருவம் கேமராவில் பதிவாகி உள்ளது. இருப்பினும், தீவிரவாதத் தாக்குதல் கடந்த 22ம் தேதி நடந்தது. அதன்பின் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளின் ஓவியங்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டனர். இவற்றை ஒப்பிட்டு பார்த்ததன் மூலம், தனது செல்போனில் பதிவான வீடியோ காட்சிகளுடன் தீவிரவாதிகளின் முகமும் ஒத்துபோவதாக ஜித் ரமேசன் அடையாளம் கண்டுள்ளார்.

இதன் மூலம், அவர் நேரடியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளை அணுகி, அவர்களிடம் வீடியோ காட்சி ஒப்படைத்தார். அந்த வீடியோவை ஸ்ரீஜித் ரமேசனிடம் பெற்றுக் கொண்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அதன் உண்மைத்தன்மை மற்றும் தீவிரவாதிகளின் அடையாளம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தீவிரவாத தாக்குதல் நடத்தும் சதி திட்டங்களுக்கு 4 நாட்களுக்கு முன்னரே அவர்கள் பேதாப் பள்ளத்தாக்கு வந்திருக்கலாம் என்றும், அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களைத் தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பஹல்காம் பள்ளத்தாக்குடன், தீவிரவாதிகள் தாக்குதல்களுக்காக மற்ற இடங்களையும் தேர்ந்தெடுத்திருந்தனர்.

சம்பவ நாளன்று பஹல்காமில் சுமார் ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இந்த இடத்தில் அதிக பாதுகாப்பும் இல்லை. பாதுகாப்பு படையின் அனுமதியின்றி இந்த இடம் சுற்றுலா பயணிகளுக்கு திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் அதனை வாய்ப்பாக பயன்படுத்தி பஹல்காம் பள்ளத்தாக்கைத் தீவிரவாத தாக்குதலை நடத்துவதற்கான இடமாக தீவிரவாதிகள் தேர்ந்தெடுத்தனர். இப்பகுதியை சுற்றியுள்ள பைன் மர காடுகளுக்குள் நுழைந்த ஆயுதமேந்திய தீவிரவாதிகள் 26 பேரைக் கொன்றுவிட்டு, பின்னர் காட்டுக்குள் தப்பியோடிவிட்டனர். இந்த தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க தற்போது ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.

The post பஹல்காம் தாக்குதலுக்கு 4 நாட்களுக்கு முன்பு ‘பேதாப்’ பள்ளத்தாக்கில் சுற்றித் திரிந்த தீவிரவாதிகள்: கேரள சுற்றுலா பயணியின் கேமராவில் பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article