பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு பதிலடி தர ராணுவத்திற்கு முழு அதிகாரம்: எப்போது, எப்படி, எங்கு என முடிவெடுக்க சுதந்திரம்; பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் முடிவு

2 weeks ago 3

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு எப்போது, எங்கு, எப்படி பதிலடி தருவது என்பதை தீர்மானிக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்குவது என பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக விரைவில் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த கோழைத்தனமான தாக்குதல் நாடு முழுவதும் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளும் அவர்களை ஆட்டுவிப்பவர்களும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என்றும், கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதே சமயம், குற்றச்சாட்டை மறுத்துள்ள பாகிஸ்தான் பதில் நடவடிக்கையாக சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து, எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாதுகாப்பு படையினருக்கு எதிராக தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது.

இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர். இதில், தீவிரவாதிகளை நசுக்கும் வலுவான பதிலடியை வழங்குவதில் இந்தியா உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த பதிலடியை வழங்குவதில் நமது ராணுவத்தின் திறனில் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கும், அவர்களை ஆட்டுவிப்பவர்களுக்கும் எப்போது, எங்கு, எப்படிப்பட்ட பதிலடி தர வேண்டும் என்பதை தீர்மானிக்க முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் உள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்த கூட்டத்தை தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், முப்படை தளபதிகளுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இதற்கு முன், 2016ல் உரியில் ராணுவ வீரர்கள் மீதான தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப்படை புகுந்து சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. அதே போல, 2019ல் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, பாலகோட் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வரிசையில் பாகிஸ்தானுக்கு பலமான பதிலடி அடுத்த ஓரிரு நாட்களில் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதுதொடர்பாக இந்திய புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே இதுதொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தூதர்களை நேரில் அழைத்து இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

* 5வது நாளாக அத்துமீறல்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 5ம் நாள் இரவாக நேற்று முன்தினமும் துப்பாக்கி சூடு நடத்தினர். காஷ்மீரின் பாராமுல்லா, குப்வாரா, அக்னூர் செக்டார்களில் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

* ஜம்முவில் பாதுகாப்பு ஒத்திகை
ஜம்முவில் ஆப் ஷம்பு கோயில் பகுதியில் தேசிய பாதுகாப்பு படையினரும் (என்எஸ்ஜி), உள்ளூர் போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பயிற்சியை மேற்கொண்டனர். பாதுகாப்பு உபகரணங்கள், ஆளில்லா கண்காணிப்பு அமைப்புகளின் உதவியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த பயிற்சி நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே இந்திய கடற்படையும் நீண்ட தூர இலக்குகளை குறிவைத்து போர் பயிற்சியை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* பாதுகாப்பு அமைச்சரவை மீண்டும் இன்று கூடுகிறது
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்த நாளே பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூடி பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தற்போது 2வது முறையாக பாதுகாப்பு அமைச்சரவை இன்று கூட உள்ளது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தேச பாதுகாப்பு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சரவை கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடக்க உள்ளது.

* சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடத்த வேண்டும் கார்கே, ராகுல் பிரதமருக்கு கடிதம்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில், ‘‘இந்த நேரத்தில் ஒற்றுமையும், உறுதியும் அவசியமாகும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தை விரைவில் கூட்டுவது முக்கியம் ” என்று குறிப்பிட்டுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தியும், இதே கோரிக்கையுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும். அங்கு மக்கள் பிரதிநிதிகள் தங்களது ஒற்றுமையையும் உறுதியையும் காட்ட முடியும். அத்தகைய சிறப்பு கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றுஅந்த கடிதத்தில் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

The post பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு பதிலடி தர ராணுவத்திற்கு முழு அதிகாரம்: எப்போது, எப்படி, எங்கு என முடிவெடுக்க சுதந்திரம்; பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article