ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளின் புகைப்படங்களுடன் போலீசார் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். தீவிரவாதிகள் பற்றிய தகவல்களைப் பெற்று, அவர்கள் கைது செய்யப்படவோ அல்லது கொல்லப்படவோ செய்தால், தகவல்களைக் கொடுத்த நபர் ரூ. 20 லட்சம் சன்மானம் பெறுவார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 7-ந் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ தாக்குதல் தொடங்கியது. இந்திய படைகள் பாகிஸ்தானின் பயங்கரவாத தளங்களை குறிவைத்து தாக்கின. பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். பதிலுக்கு பாகிஸ்தானும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவத்தினர் வழியிலேயே முறியடித்தனர்.
இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான இந்த மோதல், சர்வதேச அளவில் கவலைகளை ஏற்படுத்தியது. மோதலை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை நடத்துமாறு பல நாடுகளும் கேட்டுக்கொண்டன. இதையடுத்து இந்தியாவில் அதிரடியை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் பின்வாங்கி, சமரசத்துக்கு வந்தது. இதனால் இருநாடுகளுக்கு இடையே நடந்து வந்த சண்டை கடந்த 10-ந்தேதி மாலையுடன் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை போலீசார் ஒட்டியுள்ளனர். மேலும் தகவல் அளிப்பவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பற்றிய தகவல்களைப் பெறுவதே இதன் நோக்கம்.தகவல் தெரிவிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை அணுகலாம். இந்த அறிவிப்பு தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடனும், பொதுமக்களிடம் இருந்து தகவல்களைப் பெற்று தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிக்கவும் உதவுகிறது.
The post பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் தந்தால் 20 லட்சம் சன்மானம் appeared first on Dinakaran.