
பெங்களூரு,
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பஹல்காம் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-
"பஹல்காம் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இந்த சம்பவத்திற்கு வழிவகுத்த குறைபாடுகள் என்ன? பாதுகாப்பு தோல்விக்கு யார் காரணம்? மூன்று அடுக்கு பாதுகாப்பு இருந்தபோதிலும் பயங்கரவாத தாக்குதல் எப்படி நடந்தது? என்பது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது, ஆனால் பிரதமர் அதில் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்திற்கு வருவதற்குப் பதிலாக பிரதமர் மோடி பீகாருக்கு சென்று உரை நிகழ்த்தினார். நாட்டின் ஒருமைப்பாடு என்று வரும்போது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம்மைப் பொறுத்தவரை, நாடுதான் முதன்மையானது, மற்ற அனைத்தும் அதற்குப் பின்னர்தான்."
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.