
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெற்ற 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் இருவரும் அரை சதமடித்து அசத்தினர். ரியான் ரிக்கல்டன் 61 ரன்களும், ரோகித் சர்மா 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு மும்பை அணி 217 ரன்கள் எடுத்தது. 218 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது.
இதில், தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் (13), வைபவ் (0) ரன்களில் ஆட்டமிழந்தனர். கடந்த ஆட்டத்தில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு சதம் அடித்து அசத்திய வைபவ் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஆடிய ராணா (9), பராக் (16), ஜுரெல் (11), ஹெத்மையர் (0) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
துபே (15), ஆர்ச்சர் (30) ரன்கள் எடுத்தனர். தீக்சானா (2), கார்த்திகேயா (2) ஆகியோரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆகாஷ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அந்த அணி 16.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.