பாலக்கோடு: பாலக்கோடு நகர பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி, ஆபத்தான முறையில் பயணம் செய்து வருவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து, தினதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நகர மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளுக்கு செல்லும் நகர பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்கதையாக உள்ளது. அரசு பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் மாணவர்களை படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்வதை சமாளிக்க முடியாமல் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். அனைத்து அரசு பஸ்களிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது வரை, பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இயங்கும் நகர பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படாமல் உள்ளது. மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு செல்வது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, படிக்கட்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.