பவானியில் மேட்டூர் வலதுகரை பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றி, கழிவுநீர் தேங்கும் பகுதியை முறைப்படுத்துவது எப்போது?

6 hours ago 2

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

பவானி : பவானியில் மேட்டூர் வலதுகரை பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து குடியிருப்புகளின் கழிவுநீர் செல்லும் வகையில் கான்கிரீட் கால்வாய் கட்டப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தண்ணீர் ஓடும் வகையில் சீரமைப்பு செய்யுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து வலதுகரை வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு மாவட்டத்தில் 18 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த வாய்க்கால் பாசனத்தில் பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை கிராமம், குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 2019ல் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான மேட்டூர் வலது கரை பாசன கால்வாய், பவானி வர்ணபுரம் வாய்க்காலில் கழிவுநீர் கான்கிரீட் கால்வாய் சுமார் 500 அடி தொலைவுக்கு கட்டப்பட்டது.

அப்போதே, கிடைமட்டம் இல்லாமல் உயரமாகவும், தண்ணீர் வெளியேறிச் செல்வதற்கு வாட்டம் இல்லாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்படும் என்றும், வாய்க்காலுக்குள் கழிவுநீர் திரும்பி வரும் வாய்ப்புகள் உள்ளதாகவும் விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, வாட்டம் வைத்து கட்டுமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால், விவசாயிகள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வாட்டம் இல்லாமல் கட்டப்பட்டது.

ஏற்கனவே, கட்டப்பட்ட கான்கிரீட் கால்வாய் மட்டத்துக்கு, புதிதாக 30 மீட்டர் நீளத்துக்கு நீர்வளத்துறை சார்பில் கிடைமட்ட அளவும், வாட்டமும் இல்லாமல் கான்கிரீட் வாய்க்கால் கட்டப்பட்டது. வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் காலங்களில் தண்ணீர் வெளியேறாமல் தேங்கி விளைநிலங்களுக்கும், குடியிருப்புப் பகுதிகளிலும் புகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், பாசன வாய்க்காலில் கட்டப்பட்ட கான்கிரீட் கால்வாயில் குடியிருப்புகளின் கழிவு நீர் குழாய்கள் இணைக்கப்பட்டு, கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கழிவுநீர் வாய்க்கால் வழியாக வெளியேறி செல்லாமல், வாய்காலின் உட்புறம் தேங்கி நிற்பதோடு, சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது.

இது குறித்து மேட்டூர் அணையின் வலதுகரை வாய்க்கால் நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி தனபால் கூறுகையில், ‘‘வலது கரை கால்வாயின், கிளை கால்வாயான 1-55-55 பிரிவு, வர்ணபுரம் பாசன வாய்க்காலில் நீர்வளத்துறையும், பவானி ஊராட்சி ஒன்றியம் இணைந்து கட்டிய காங்கிரீட் கால்வாய், கிடைமட்டம் சுமார் ஒன்றரை அடி அளவுக்கு உயரமாக உள்ளதால், கடைமடைக்கு தண்ணீர் செல்வதில்லை. சட்டவிரோதமாக நீர்வளத்துறையின் அனுமதி, தடையில்லா சான்று இல்லாமல் கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் அறிவித்தபோது, பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள் பிரச்னையை தீர்க்க அக்கறை காட்டவில்லை. பாசன வாய்க்காலில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு, கழிவுநீர் தேங்கும் பகுதியை முறையாகப் பார்வையிட்டு தீர்வு காண வேண்டும்’’ என்றார்.

The post பவானியில் மேட்டூர் வலதுகரை பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்றி, கழிவுநீர் தேங்கும் பகுதியை முறைப்படுத்துவது எப்போது? appeared first on Dinakaran.

Read Entire Article