ஈரோடு: நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து 16 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால், கொடிவேரி தடுப்பணையில் குளிக்க, சுற்றுலா பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2.5 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி மற்றும் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. பவானிசாகர் அணையில் 105 அடி வரை, 32.5 டிஎம்சி நீரினைத் தேக்க முடியும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கனமழையால், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.