
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். தற்போது இவர் 'ஹரி ஹர வீரமல்லு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார்.
நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக கடந்த மாதம் 28-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், அப்போது வெளியாகாத இப்படம் கடந்த 9-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், அப்போதும் வெளியாகவில்லை. இவ்வாறு பல கட்ட தடைகளை தாண்டி தற்போது இப்படம் ஜூன் 12-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் 'ஹரிஹர வீர மல்லு' படத்திற்கு வேறொரு சிக்கல் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆந்திராவில் திரையரங்க உரிமையாளர்களுக்கும், திரைப்பட வினியோகஸ்தர்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இப்போது இருக்கும் வருவாய் பகிர்வு விதிகளில் மாற்றம் கொண்டுவரும்படி திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அதற்கு வினியோகஸ்தர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால் 'ஹரிஹர வீர மல்லு' திரைப்படம் வினியோகத்திலும், திரையரங்க வெளியீட்டிலும் தேக்க நிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்கின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் பவன்கல்யாண் திரைப்படம் என்பதால், ரசிகா்கள் மத்தியிலும் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே பிரச்சினைகளை விரைவாக தீர்க்காவிட்டால், படம் வெளியாவதில் சிக்கல் வரலாம் என கூறப்படுகிறது.